சென்னை: மத்திய அந்தமான் கடலுக்கு மேல் 5.8 கிமீ உயரத்தில் மேல் வளிமண்டல சுழற்சி உள்ளது. அதன் தாக்கத்தால், மத்திய வங்கக் கடலின் கிழக்குப் பகுதியிலும், அதை ஒட்டிய வடக்கு அந்தமான் கடலிலும், வரும் 21-ம் தேதி (நாளை) புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது.
இது வடமேற்கு திசையில் நகர்ந்து வரும் 23-ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தின் வடமாநிலங்களில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக, அக்டோபர் 20, 21, 24 ஆகிய தேதிகளில் பெரும்பாலான இடங்களிலும், அக்டோபர் 22, 23, 25 தேதிகளில் ஒரு சில இடங்களிலும் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும்.
இன்று (அக். 20) தர்மபுரி, சேலம், கிருஷ்ணகிரி, ஈரோடு, திருப்பத்தூர், வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், கோவை, திருப்பூர், திண்டுக்கல் மாவட்ட மலைப்பகுதிகளிலும் நாளை (அக். 21) நீலகிரி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருப்பத்தூர், பெரம்பலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
கலசப்பாக்கத்தில் 17 செ.மீ. மழை அளவு: நேற்று காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கத்தில் 17 செ.மீ., புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் 10 செ.மீ., மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் 9 செ.மீ., விழுப்புரம் மாவட்டம் அவலூர்பேட்டை, தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் 8 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி, புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை, தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம். துவாக்குடி, திருச்சி மாவட்டம் 7 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.