கோவை: தொண்டாமுத்தூரை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் கடந்த சில மாதங்களாக முகாமிட்டுள்ள காட்டு யானைகள், உணவு தேடி தோட்டம், கிராமங்களுக்குள் புகுந்து பூட்டிய வீடுகளை உடைத்து சேதப்படுத்தியும், உணவு பொருட்களையும் தின்று வருகின்றன. தோட்டங்களில் கால்நடைகளுக்கு வைக்கப்படும் தீவனம் மற்றும் உணவுகளை தொடர்ந்து கொள்ளையடித்து வருகின்றனர்.
இந்நிலையில் தடாகம் அருகே பாப்பநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்த வெங்கடேசன் என்பவரது தோட்டத்தில் பூட்டப்பட்டிருந்த இரும்பு கேட்டை காட்டு யானை ஆக்ரோஷமாக தள்ளி திறக்கும் வீடியோ காட்சி அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சோலார் மின் வேலிகள் மற்றும் பூட்டிய இரும்புக் கதவுகளைத் திறந்து யானைகள் தோட்டங்களுக்குள் நுழைவதை இப்போது கற்றுக்கொண்டன. இதனால் தங்களுக்கு பாதிப்பு இல்லை என கருதும் யானைகள், மின்சாரம் தாக்கிவிடுமோ என்ற அச்சமின்றி உள்ளே நுழைய துவங்கியுள்ளன. பெரும் அசம்பாவிதங்கள் நிகழும் முன் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல், தமிழக அரசும், வனத்துறையினரும், யானைகள் உள்ளே நுழைவதை தடுக்க, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.