ஊட்டி: நீலகிரி மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு இயக்கப்படும் நூற்றாண்டு பழமையான மலை ரயிலில் வெளி மாநிலங்கள் மட்டுமின்றி பல்வேறு வெளிநாடுகளில் இருந்தும் பயணிக்க ஆர்வம் காட்டுகின்றனர். இந்நிலையில், பொங்கல் பண்டிகை விடுமுறைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் பயணத்தை எளிதாக்கும் வகையில் சிறப்பு மலை ரயில் சேவையை தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் அறிவித்துள்ளது.
அதன்படி, குன்னூர் – ஊட்டி இடையே ஜனவரி 16 முதல் 19-ம் தேதி வரை 4 நாட்களுக்கு சிறப்பு மலை ரயில் இயக்கப்படுகிறது.குன்னூரில் இருந்து காலை 8.20 மணிக்கு புறப்பட்டு 9.40 மணிக்கு ஊட்டியை சென்றடையும். அதேபோல் ஊட்டியில் இருந்து மாலை 4.45 மணிக்கு புறப்பட்டு 5.55 மணிக்கு குன்னூரை சென்றடையும். ஊட்டி – கெத்தி – ஊட்டி இடையே 3 சுற்று ஜாய் ரைடு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். முதல் சுற்று ஊட்டியில் இருந்து காலை 9.45 மணிக்கு புறப்பட்டு 10.10 மணிக்கு கெத்தியை சென்றடையும்.
அங்கிருந்து காலை 10.30 மணிக்கு புறப்பட்டு 11 மணிக்கு ஊட்டி சென்றடையும். இரண்டாவது சுற்று ஊட்டியில் இருந்து காலை 11.30 மணிக்கு புறப்பட்டு மதியம் 12.10 மணிக்கு கெத்தியை சென்றடையும். அங்கிருந்து மதியம் 12.40 மணிக்கு புறப்பட்டு மதியம் 1.10 மணிக்கு ஊட்டி சென்றடையும். மூன்றாவது சுற்று ஊட்டியில் இருந்து மாலை 3 மணிக்கு புறப்பட்டு 3.30 மணிக்கு கெத்தியை சென்றடையும். அங்கிருந்து மாலை 4 மணிக்கு புறப்பட்டு 4.30 மணிக்கு ஊட்டி சென்றடையும்.
இரண்டு சேவைகளும் முதல் வகுப்பில் 80 இருக்கைகள் மற்றும் இரண்டாம் வகுப்பில் 130 இருக்கைகளுடன் இயக்கப்படும். அதேபோல், மேட்டுப்பாளையம்-ஊட்டி சிறப்பு ரயில் ஜனவரி 16 மற்றும் 18 ஆகிய தேதிகளில் மேட்டுப்பாளையத்தில் இருந்து காலை 9.10 மணிக்கு புறப்பட்டு மதியம் 2.25 மணிக்கு ஊட்டி வந்தடையும். மறுபுறம் ஜனவரி 17 மற்றும் 19 ஆகிய தேதிகளில் ஊட்டியில் இருந்து காலை 11.25 மணிக்கு புறப்பட்டு மாலை 4.20 மணிக்கு மேட்டுப்பாளையத்தை வந்தடையும். மேட்டுப்பாளையம்-குன்னூர் ரயிலில் முதல் வகுப்பில் 40 இருக்கைகளும், குன்னூர்-ஊட்டி ரயிலில் 80 இருக்கைகளும், இரண்டாம் வகுப்பில் 140 இருக்கைகளும் இருக்கும். சுற்றுலா பயணிகள் சிறப்பு மலை ரயிலில் முன்பதிவு செய்து பயணிக்கலாம் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.