சென்னை: கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து பீகார் மாநிலம் தர்பங்கா நோக்கி சென்ற பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயில், திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டை ரயில் நிலையம் அருகே கடந்த 11-ம் தேதி இரவு நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது மோதியது.
13 பெட்டிகள் தடம் புரண்டன. இந்த விபத்தில் 19 பேர் காயமடைந்துள்ளனர். இந்த பயங்கர விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை. இதனிடையே விபத்து நடந்த இடத்தில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
விபத்து நடந்த இடத்தில் இருந்த ‘ஸ்விட்ச் பாயின்ட்’ போல்ட் அகற்றப்பட்டது. இது அசாதாரணமானது என்று அவர்கள் கண்டறிந்தனர். தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு மாதிரிகள் எடுக்கப்பட்டது.
இதேபோல் ரயில்வே போலீசாரும் விசாரணை நடத்தி வந்தனர். இதனிடையே, கவரைப்பேட்டை நிலைய அலுவலர் முனிபிரசாத் பாபு, கொருக்குப்பேட்டை போலீசில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் ரயில்வே போலீஸார் 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தனர்.
அதாவது, காயம் மற்றும் துக்கத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்படுதல், மனித உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்படுதல், அலட்சியச் செயலால் ரயில் பயணிகளின் பாதுகாப்பிற்கு ஆபத்து ஏற்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளதால், ஒவ்வொருவருக்கும் சம்மன் அனுப்பி விசாரிக்கவும் ரயில்வே போலீசார் திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில், விபத்து குறித்து விசாரிக்க தமிழக ரயில்வே போலீஸ் டி.எஸ்.பி.க்கள் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
ரயில்வே போலீஸ் சூப்பிரண்டு ஈஸ்வரன் மேற்பார்வையில் மத்திய ரயில்வே போலீஸ் டிஎஸ்பி கர்ணன், எழும்பூர் ரெயில்வே போலீஸ் டிஎஸ்பி ரமேஷ், சேலம் ரெயில்வே போலீஸ் டிஎஸ்பி பெரியசாமி ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு தனி அணியிலும் 8 பேர் உள்ளனர். சம்பவ இடத்தில் பதிவான சிசிடிவி காட்சிகள், அங்கு கிடைத்த ஆதாரங்கள், அன்றைய தினம் பணியில் இருந்த ரயில்வே அதிகாரிகள் மற்றும் ஊழியர்களிடம் விசாரணை நடத்த உள்ளனர். அதேபோல், விபத்து தொடர்பான ஆதாரங்கள் மற்றும் கருத்துகள் இருந்தால் ரயில்வே போலீஸாரிடம் தெரிவிக்கலாம் என ரயில்வே போலீஸார் தெரிவித்துள்ளனர்.