தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழுக் கூட்டம் சென்னையில் திருவான்மியூரில் நடந்தது. இதில் அக்கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா திமுகவை கடுமையாக விமர்சித்தார். அவர் கூறியதாவது, திமுக, எதிர்க்கட்சிகளை தனது சாதகமாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக குற்றம்சாட்டினார். “எதிர்க்கட்சிகளை எப்படி ஒடுக்க வேண்டும்? அவர்களின் தலைவர்களை சந்தேகத்திற்கு உள்ளாக்கும் வழிகள் என்ன? தவெகாவுக்கு எதிராக பொய்ப் பிரசாரம் செய்ய என்ன வழிகள்? – இவையெல்லாம் திமுக தீவிரமாக திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது,” என அவர் தெரிவித்துள்ளார்.

அதே நேரத்தில், திமுக தனது முதல் வெற்றியாக அண்ணாமலை அரசியலை கைப்பற்றியுள்ளதாக அவர் குறிப்பிட்டார். “இப்போது, மோடியின் கீழ், டெல்லியில் அமர்ந்துள்ள பாஜக தலைவர், பிற மாநிலங்களில் ஆதரவு திரட்டுவதற்காக வேலை செய்தாலும், தமிழகத்தில் திமுக வெற்றிகோப்புகளை பெற்று வருகிறது,” என்றார்.
அவர் மேலும் கூறியதாவது, “திமுக புலியை தூண்டிவிடும் ஆடுகளாக செயல்படுகிறது. நாங்கள் மக்களின் உரிமைக்காக, ஜனநாயகத்திற்காக போராடிக்கொண்டிருக்கின்ற போது, அண்ணாமலை சட்டையை கழற்றி, சாட்டையால் தன்னைத் தாக்கி விட்டார்.”
இக்கூட்டத்தில், திமுகவின் அரசியல் செயல்பாடுகளை மதிப்பிடும் வகையில், “பெரியார், அம்பேத்கர் சிலைகள் அண்ணா அறிவாலயத்தில் வைக்கப்படவில்லை. தமிழகத்தின் உள்துறை அமைச்சராக முதல்வர் செயல் நிர்வாகம் சரியில்லை. சட்டமன்றத்தில் ஜனநாயகத்தின் குரலை முடக்கிவிடுகிறார்கள். எதிர்க்கட்சியினர் பேசினால், உடனே நேரடி ஒளிபரப்பை நிறுத்தி விடுகிறார்கள்,” என அவர் கூறினார்.
மேலும், திமுக மற்றும் பாஜக வெளிப்படையாக எதிரிகளாக நடிக்கின்றனர், ஆனால் மறைமுகமாக இணைந்து செயல்படுகிறார்கள் என்று ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார். “முசோலினியும் ஹிட்லரும் இணைந்து ஆட்சியை கட்டுப்படுத்தியதுபோல், இவர்கள் தங்களது அரசியல் நாடகத்தை தீவிரமாக வளர்த்து வருகிறார்கள்,” என அவர் கடுமையாக விமர்சித்தார்.