சென்னை: அப்பா என் பேருல உயில் எழுதி வச்சிட்டாரு. சகோதரர் ராம்குமாருக்கு உரிமை இல்லை என்று நடிகர் பிரபு ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும் நடிகருரமான துஷ்யந்த், அவருடைய மனைவி அபிராமி ஆகியோர் பங்குதாரர்களாக இருக்கும் ஈசன் சினிமா தயாரிப்பு நிறுவனம் ஜகஜால கில்லாடி என்ற படத்தை தயாரித்தது, இந்த படத்தில் நடிகை நிவேதா பெத்துராஜ், விஷ்ணு விஷால் ஆகியோரும் நடித்தார்கள். இந்த பட தயாரிப்பதற்காக தன பாக்கியம் என்டர்பிரைசஸ் நிறுவனத்திடமிருந்து 3, 74,75,000 பணத்தை துஷ்யந்த் கடன் வாங்கி இருந்தார்.
அந்த கடனை வருடத்திற்கு 30% வட்டியோடு திருப்பிக் கொடுக்கவும் உறுதியளிக்கப்பட்டு இருந்தது. ஆனால் கடன் தொகை திருப்பிக் கொடுக்காததால் வழக்கு தொடரப்பட்டது. இதனை அடுத்து இரு தரப்போடும் பேச்சுவார்த்தை நடத்திய நீதிபதி கடன் தொகை வட்டியோடு சேர்த்து 9 கோடியே 2 லட்சத்து 40 ஆயிரத்தை வசூலிக்கும் விதமாக ஜகஜால கில்லாடி படத்தின் அனைத்து உரிமைகளையும் தன பாக்கியம் நிறுவனத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் அந்த படத்தை விற்பனை செய்து கடனை ஈடு கட்ட வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
ஆனால் இந்த உத்தரவின் படி அனைத்து உரிமைகளையும் வழங்காததையாடுத்து ராம்குமாரின் தந்தை சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்து பொது ஏலம் விட உத்தரவு கோரி தனபாக்கியம் என்டர்பிரைசஸ் நிறுவனம் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தது.
இந்த வழக்கை விசாரித்த ஹைகோர்ட் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்ய உத்தரவிட்டது. இந்த நிலையில் அன்னை இல்லம் வீட்டை ஜப்தி செய்ய பிறப்பித்த உத்தரவை நீக்க வேண்டும் என்று நடிகர் பிரபு சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அதில் நடிகர் சிவாஜி கணேசன் உயிரோடு இருந்தபோது அன்னை இல்லம் வீட்டை எனக்கு உயில் எழுதி வைத்து இருக்கிறார். இதற்கு தனது சகோதரர்கள், சகோதரிகளும் ஒப்புக்கொண்டதையடுத்து தன்னுடைய பெயரில் பத்திரம் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார் .
ராம்குமாருக்கு இதில் எந்த உரிமையும் இல்லாததால் வீட்டை ஜப்தி செய்ய பிறப்பித்த உத்தரவை நீக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.