தாராவி மறுசீரமைப்புத் திட்டம் தொடர்பாக சிவசேனா முன்னாள் அமைச்சர் ஆதித்யா தாக்கரே பரபரப்பாக கருத்து வெளியிட்டுள்ளார். மும்பையின் மையத்தில் 590 ஏக்கர் பரப்பளவில் பரவிய தாராவி, ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப் பகுதியாகத் திகழ்கிறது. இங்கு சுமார் ஆறு லட்சம் மக்கள், 100 சதுர அடிகளைக் கொண்ட வீடுகளில் நெருக்கடியாக வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் பெரும்பாலும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களாகவும், பல தலைமுறைகளாக தாராவியில் வாழ்ந்து வருகின்றனர்.
தாராவி மறுசீரமைப்புத் திட்டம் 2022ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டு, அதானி குழுமம் 5069 கோடி ரூபாய்க்கு இந்த திட்டத்தை டெண்டர் எடுத்துள்ளது. புதிய கட்டமைப்பில், வணிக வளாகங்கள், அலுவலகங்கள், விளையாட்டு அரங்குகள் மற்றும் மால்கள் உருவாக்கப்பட உள்ளன. எனினும், இந்த திட்டத்தின் கீழ், 2000ம் ஆண்டுக்குப் பிறகு தாராவியில் குடியேறியவர்களுக்கு மலிவு விலை வாடகை வீடுகள் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சூழலில், ஆதித்யா தாக்கரே, “தாராவி மக்களை வீடற்றவர்களாக ஆக்கியுள்ள ஏக்நாத் ஷிண்டே அரசு, மகாராஷ்டிரா அரசின் ஆதானி குழுமத்திற்கு நிலத்தை ஒப்படைத்துள்ளது” என்று குற்றம்சாட்டியுள்ளார். அவர், “தாராவியில் உள்ள தற்போதைய மறுசீரமைப்பு திட்டத்தை நிறுத்தி, எங்களது ஆட்சிக்கு வந்தால், 500 சதுர அடியில் வீடுகள் வழங்கப்படும்” என்று உறுதியளித்துள்ளார்.