சென்னை: சென்னை ஐஐடியின் 66-வது ஆண்டு விழா, ஐஐடி வளாகத்தில் நேற்று நடைபெற்றது. ஐஐடி முன்னாள் மாணவரும், அனுசந்தன் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளையின் தலைமை நிர்வாக அதிகாரியுமான சிவகுமார் கல்யாணராமன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவர் பேசுகையில், “ஐஐடியில் நிலவும் ஆராய்ச்சி சூழல் கண்டு மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். உயர் தொழில்நுட்ப ஸ்டார்ட் அப்களை ஊக்குவிக்கும் திட்டங்களை எங்கள் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.
ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறையில் தனியார் துறை அதிக முதலீடு செய்ய உந்து சக்தியாக இருக்கிறோம். பொதுத்துறை நிறுவனங்களும் இத்துறையில் அதிக முதலீடு செய்ய முன்வர வேண்டும்’’ என்றார். ஐஐடி இயக்குநர் வீ.காமகோடி தலைமை வகித்துப் பேசுகையில், “நாட்டின் வளர்ச்சிக்குப் பங்களிக்க ஐஐடி மாணவர்கள் அரசுப் பணிகளில் சேர வேண்டும்.

அதன்படி, ஐஐடி மாணவர்களை யுபிஎஸ்சி நடத்தும் சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு தயார்படுத்த புதிய திட்டத்தை தொடங்கியுள்ளோம்’’ என்றார். விழாவில், இஸ்ரோ முன்னாள் தலைவர் எஸ்.சோம்நாத் உட்பட 12 முன்னாள் மாணவர்களுக்கு சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. மேலும், சிறந்த பேராசிரியர்கள் மற்றும் சிறந்த மாணவர்கள் விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.