சென்னை: தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மறுக்கட்டுமான திட்டங்கள் தொடர்பாக அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையில், சென்னை மாவட்ட சட்டமன்ற உறுப்பினர்களுடன் இன்று (பிப்ரவரி 26) ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டம், வாரியத்தின் கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்தில், சென்னையில் மேற்கொள்ளப்பட்டு வரும் மறுக்கட்டுமான பணிகளின் முன்னேற்றம் குறித்து விவாதிக்கப்பட்டது.
அமைச்சர் தா.மோ.அன்பரசன் கூட்டத்தில் பேசிய போது, தமிழக முதல்வர் கடந்த நிதிநிலை அறிக்கையில் ரூ.1148.85 கோடி மதிப்பீட்டில் 17 திட்டப் பகுதிகளில் 6424 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்படும் என்று அறிவித்ததை நினைவுறுத்தினார். இந்தத் திட்டத்தில், ராயபுரம், பெரம்பூர், ராதாகிருஷ்ணன் நகர், துறைமுகம், எழும்பூர், ஆயிரம் விளக்கு, வேளச்சேரி, மயிலாப்பூர் உள்ளிட்ட சட்டமன்ற தொகுதிகளில் நடைமுறையில் உள்ள மறுக்கட்டுமான திட்டங்கள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.
குடியிருப்புகள் காலியாக மாறும் வரை, அங்கு வசிக்கும் மக்களுக்கு உடனடியாக ரூ.24,000 கருணைத்தொகை வழங்கப்பட வேண்டும். சட்டமன்ற உறுப்பினர்கள், குடியிருப்புகள் காலி செய்யும் பணியில் முன்னின்று செயல்பட வேண்டும். புதிய குடியிருப்புகளுக்கான கட்டுமான பணிகள் மார்ச் மாத இறுதிக்குள் தொடங்க வேண்டும். வாரிய அதிகாரிகள், புதிய இடங்களில் கட்டப்படும் குடியிருப்புகளுக்கான அரசு அனுமதிகளை விரைவாக பெற்றுத் தர வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.
அயோத்திதாஸ் பண்டிதர் குடியிருப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 40,792 குடியிருப்புகளில் பழுதுபார்ப்பு மற்றும் புனரமைப்பு பணிகள் நடைமுறையில் உள்ளன. இந்தப் பணிகள் விரைவாக முடிக்க வேண்டும். மேலும், வாரியத்தால் வழங்கப்பட்ட மனைகளின் விற்பனை பத்திரங்களை வழங்க, கடந்த 24-ஆம் தேதி முதல் அடுத்த மாதம் 8-ஆம் தேதி வரை தொகுதி வாரியாக சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன.
சட்டமன்ற உறுப்பினர்கள், இந்த முகாம்களில் கலந்துகொண்டு குடியிருப்புத் தாரர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி, அவர்கள் விற்பனை பத்திரங்களை பெற உறுதி செய்ய வேண்டும். இது மட்டுமல்லாது, வரும் நிதியாண்டில் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் தொகுதியில் மேற்கொள்ள வேண்டிய மறுக்கட்டுமான திட்டங்களை முன்மொழிந்தால், அவற்றை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று பரிசீலனை செய்யப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில், தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் காகர்லா உஷா, சட்டமன்ற உறுப்பினர்கள், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண்மை இயக்குநர் அன்சுல் மிஸ்ரா, இணை மேலாண்மை இயக்குநர் க.விஜயகார்த்திகேயன், வாரிய செயலாளர் நா.காளிதாஸ், தலைமை பொறியாளர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.