மதுரை எய்ம்ஸ் 2025 டிசம்பர் முதல் செயல்படத் தொடங்கும் என்று எய்ம்ஸ் நிர்வாக இயக்குநர் எம்.ஹனுமந்த ராவ் தெரிவித்தார். ராமநாதபுரம் பட்டணம்காத்தான் நேஷனல் அகாடமி பள்ளி குழுமம் சார்பில் புற்றுநோய் விழிப்புணர்வு கண்காட்சியை கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலன் துவக்கி வைத்தார். மதுரை எய்ம்ஸ் நிர்வாக இயக்குநர் எம்.ஹனுமந்தராவ் முன்னிலை வகித்து பேசியதாவது:-
நாற்பது சதவீத புற்றுநோய் குணப்படுத்தக்கூடியது. ஆபத்தான 5 வகையான புற்றுநோய்களைத் தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் ஹெச்பிவி தடுப்பூசியை இலவசமாக வழங்குகின்றன. 19 முதல் 45 வயதுடையவர்கள் இந்த தடுப்பூசியைப் பெறலாம். பின்னர் அவரிடம் மதுரை எய்ம்ஸ் கட்டிடம் குறித்து கேட்டபோது, மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. மருத்துவக் கல்லூரி, விடுதி, வெளிநோயாளிகள் மற்றும் குறிப்பிட்ட உள்நோயாளிகளுக்கான மருத்துவமனைகளின் கட்டுமானப் பணிகள் முடிந்த பிறகு 2025 டிசம்பரில் எய்ம்ஸ் செயல்படத் தொடங்கும்.
அதற்குள் ராமநாதபுரத்தில் செயல்பட்டு வரும் எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி முழுவதும் மதுரைக்கு மாற்றப்படும். மீதமுள்ள கட்டுமானப் பணிகள் அடுத்த 15 மாதங்களில் முடிக்கப்பட்டு மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை முழுமையாக செயல்படத் தொடங்கும். இவ்வாறு அவர் கூறினார்.