சென்னை: சென்னையில் நேற்று விமான சாகச நிகழ்ச்சி நடந்தது. இதில் ஒவ்வொரு சாகச நிகழ்ச்சிகளுக்கும் அழகான தமிழ் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன.
அதன்படி, சங்கம், சேரன், சோழன், பல்லவர், காவேரி, காஞ்சி, நட்ராஜ் என்று தமிழ்ப் பெயர்கள் சூட்டப்பட்டன. மேலும், பார்வையாளர்களை மகிழ்விக்கும் வகையில் ஒவ்வொரு சாகச நிகழ்ச்சியின் போதும் திரைப்படப் பாடல்கள் இசைக்கப்பட்டன.
குறிப்பாக, கபாலி படத்தின் ‘நெருப்புடா’ பாடல் தேஜஸ் விமான சாகசத்தின் போது ஒலித்தது. சாகச நிகழ்ச்சியை சென்னையை சேர்ந்த விமானப்படை அதிகாரி கார்த்திக் தனது மனைவியுடன் தூய தமிழில் தொகுத்து வழங்கினார்.
அவர்களின் வர்ணனை பார்வையாளர்களை வெகுவாக மகிழ்வித்தது. மேலும், தமிழ் திரைப்பட பாடல்களை மக்கள் ஆர்வத்துடன் கேட்டனர். அதேபோல் சாரங் ஹெலிகாப்டர்கள் சாகசப் பயணத்தின் போது ஏ.ஆர்.ரகுமானின் வந்தே மாதரம் இசைக்கப்பட்டது.
தேஜாஸ் மற்றும் ரஃபேல் போர் விமானங்கள் வானத்தில் தீப்பிழம்புகளை உமிழ்ந்தன, தீபாவளியின் ஆரம்ப கொண்டாட்டமாக பார்வையாளர்களை பரவசப்படுத்தியது. மேலும், சூர்யகிரண் குழு நிகழ்ச்சியை விட்டு வெளியேறியதும், விமானிகள் தங்கள் காக்பிட்டிலிருந்து நன்றி, மீண்டும் சந்திப்போம் என்று கூறி விடைபெற்றனர்.
அதேபோல் டார்னியர் விமானத்தின் பைலட் தமிழில் பேசியது நேரலையாக ஒளிபரப்பப்பட்டது. மேலும், ஜாகுவார் போர் விமானத்தில் பொருத்தப்பட்டிருந்த கேமரா, வானில் பறக்கும் விமானத்தின் நேரடி ஒளிபரப்பை ஒளிபரப்பியது. பார்வையாளர்கள் மிகவும் ரசித்தார்கள்.