திருப்புவனம் காவலாளி அஜித் குமார் மரணம் தொடர்பாக நிகிதா மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், அவர் நிகழ்ந்த சம்பவம் குறித்து விளக்கமளித்துள்ளார். புதிய தலைமுறைக்கு அளித்த பேட்டியில், சம்பவத்தன்று திருமங்கலத்தில் உள்ள மருத்துவமனைக்கு தனது தாயுடன் சென்றதாகவும், அவரின் உடல்நிலை மோசமாக இருந்ததால் நகைகளை பாதுகாப்பதற்காகவே காரில் வைக்கச் சொன்னதாகவும் நிகிதா தெரிவித்தார். கோயிலுக்குச் செல்லும் போதும், அர்ச்சனை செய்வதற்காக உள்ளே சென்றபோதும் அஜித்திடம் கார் சாவியை வழங்கியதாகவும், பின்னர் காரில் இருந்த நகைகள் காணாமல் போனதாகவும் கூறினார்.

நிகிதாவின் விளக்கத்தில், “கார் சாவி அஜித்திடம் இருந்தது. நாங்கள் திரும்பியதும் நகைகள் காணவில்லை என்பதற்காக அவரிடம் விசாரித்தேன். ஆனால், அவர் கார் ஓட்டத் தெரியாதவர் என்பது எங்களுக்குத் தெரியவில்லை. இந்த நிலையில், அஜித் மீது புகார் அளித்ததும், அவர் உயிரிழந்த செய்தி அதிர்ச்சியாக இருந்தது” என குறிப்பிட்டுள்ளார். மேலும், அவருக்கு காவல் துறையினர் மரியாதையற்ற முறையில் நடந்துகொண்டதாகவும், விசாரணை முறைகள் முற்றிலும் தவறாக இருந்ததாகவும் நிகிதா கூறியுள்ளார்.
இதே நேரத்தில், தென்னிந்திய ஃபார்வர்டு பிளாக் கட்சித் தலைவர் திருமாறன் கூறிய குற்றச்சாட்டுக்கு நிகிதா தெளிவாக மறுப்பு தெரிவித்தார். “திருமாறன் உடனான எனது உறவு பல ஆண்டுகளுக்கு முன்பே முடிந்துவிட்டது. அவர் கூறுவது போல ₹10 லட்சம் பெற்றுக்கொண்டு விவாகரத்து கொடுத்ததாகச் சொல்வது அப்பட்டமான பொய்யாகும். எனக்கு அவரிடம் எந்தப் பணமும் வேண்டியதில்லை, அவருடன் எந்த தொடர்பும் இப்போது இல்லை” என்று தெரிவித்தார்.
திருமாறனின் குற்றச்சாட்டில், நிகிதா பலர் மீது திருமண மோசடி புகார்கள் கொடுத்தவர் என்றும், பண மோசடி, வேலை வாய்ப்பு முறைகேடுகள் செய்தவர் என்றும் அவர் கூறியிருந்தார். அதற்கு பதிலளித்த நிகிதா, இவையெல்லாம் அவதூறு எனவும், உண்மை நிலையை தெரியாமலேயே வதந்திகள் பரப்பப்படுவதாகவும் தெரிவித்துள்ளார். தற்போது இந்த விவகாரம் சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், நீதிமன்ற விசாரணைகளின் மூலம் உண்மை வெளிச்சம் காணும் என எதிர்பார்க்கப்படுகிறது.