தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், முன்னாள் மாணவிகள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதையொட்டி, பேராவூரணி வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து, மேளதாளங்கள் முழங்க, நாட்டியக் குதிரைகள் நடனமாட, இந்நாள் மாணவிகள் சிலம்பம் சுழற்றியவாறு செல்ல, முன்னாள் மாணவிகள் 1000க்கும் மேற்பட்டோர் ஊர்வலமாகச் சென்று அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சென்றடைந்தனர்.
முன்னதாக பேரணியை பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார் துவக்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து பேராவூரணி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த விழா மேடையில், முக்கியப் பிரமுகர்களான சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார், பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் சுப.சேகர், கல்விப்புரவலர் க.அன்பழகன் பள்ளி மேலாண்மைக் குழு தலைவி மகேஸ்வரி மற்றும் முன்னாள் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்க அனைவருக்கும் சிறப்பு செய்யப்பட்டது.
பின்னர் பந்தலில் 1966 முதல் 2025 ஆம் ஆண்டு வரை படித்த மாணவிகள் சுமார் 2,000 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளை கண்டு ரசித்தனர். மேலும், தாங்கள் படித்த வகுப்பறைக்கு சென்று இருக்கைகளில் அமர்ந்தும், தங்களுக்கு பாடம் நடத்திய ஆசிரியர்களை சந்தித்து வாழ்த்துப் பெற்றும், செல்பி எடுத்தும் மகிழ்ந்தனர். கேக் வெட்டி தங்கள் சந்திப்பை உற்சாகமாக கொண்டாடினர்.
மேலும் தங்கள் குழந்தைகள், குடும்பத்தினரை சக தோழிகளுக்கு அறிமுகம் செய்து வைத்தும் மகிழ்ந்தனர். அனைவரும் மதிய விருந்துண்டு மகிழ்ந்தனர். காலை தொடங்கிய நிகழ்ச்சி மாலை 5 மணிக்கு நிறைவடைந்தது.
முன்னாள் மாணவியர் சந்திப்புக்காக குடும்பத் தலைவிகள், மருத்துவர்கள், ஆசிரியர்கள், பொறியாளர்கள் என பணியாற்றி வரும் முன்னாள் மாணவிகள் தங்களுக்குள் கட்டி அணைத்து கண்ணீர் மல்க மீண்டும் எப்போது சந்திப்போம் என்ற கவலையுடன் பிரிந்து சென்ற சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.