திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் கடந்த ஒரு மாதமாக முழு கொள்ளளவை எட்டியுள்ளது. 90 அடி உயரமுள்ள அமராவதி அணை, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் சுமார் 55,000 ஏக்கர் நிலங்களுக்கு பாசன வசதிகளை வழங்குகிறது.
பழைய ஆயக்கட்டு பாசனப் பகுதிகளுக்கு ஆற்றின் வழியாகவும், புதிய ஆயக்கட்டுப் பகுதிகளுக்கு பிரதான கால்வாய் வழியாகவும் தண்ணீர் திறக்கப்படுகிறது. இது தவிர, ஆற்றின் ஓரத்தில் உள்ள நூற்றுக்கணக்கான கிராமங்களுக்கு பயனளிக்கும் வகையில் குடிநீர்த் திட்டங்களும் செயல்படுத்தப்படுகின்றன. இந்த அணை 4.04 டிஎம்சி தண்ணீரை சேமிக்க முடியும்.

தென்மேற்கு பருவமழையின் போது ஜூன் முதல் செப்டம்பர் வரையிலும், வடகிழக்கு பருவமழையின் போது அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலும் அமராவதி அணைக்கு நீர் வரத்து இருக்கும். ஜூன் 17-ம் தேதி அணையின் நீர்மட்டம் 88 அடியை எட்டியதால், உபரி நீர் ஆற்றிலும் பிரதான கால்வாயிலும் திறக்கப்பட்டது.
இந்நிலையில், நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் பருவமழை காரணமாக நீர் வரத்து அதிகரித்து வருகிறது. அணையின் நீர்மட்டம் 88.03 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 2685 கன அடியாகவும், ஆறு மற்றும் பிரதான கால்வாய் வழியாக வினாடிக்கு 2716 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது. கடந்த ஒரு மாதமாக அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.