சென்னை: தமிழக பாஜக சார்பாக நெல்லையில் நடைபெறவுள்ள பூத் கமிட்டி மாநாட்டில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்க உள்ளார். தென் மாவட்டங்களைச் சேர்ந்த 30 தொகுதிகளின் பூத் கமிட்டி நிர்வாகிகள் இதில் கலந்து கொள்வார்கள். இந்த மாநாடு தமிழக பாஜகவின் அடுத்த கட்ட திட்டங்களுக்கு முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
தமிழகத்தில் சட்டசபைத் தேர்தல் இன்னும் ஏழு மாதங்களில் நடைபெற உள்ளது. இதனால் அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றன. பாஜக தரப்பில் பூத் கமிட்டி அமைக்கும் பணிகள் அதிவேகமாக நடைபெற்று வருகின்றன.

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பல தொகுதிகளில் நேரடியாகச் சென்று ஆலோசனைகள் வழங்கினார். அண்ணாமலை தலைமையில் அமைக்கப்பட்ட சில போலியான பூத் கமிட்டிகள் நீக்கப்பட்டன. அதன் பின் நெல்லையில் ஆகஸ்ட் 22ஆம் தேதி மாநாடு நடத்த முடிவு செய்யப்பட்டது.
மாநாட்டில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, அமித்ஷா அல்லது நிர்மலா சீதாராமன் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் அமித்ஷா நேரடியாக வருவதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் பாஜகவினரிடையே பெரும் உற்சாகம் நிலவுகிறது. நயினார் நாகேந்திரனின் சொந்த மாவட்டத்தில் நடைபெறவுள்ள இந்த மாநாட்டில் பாஜகவின் வலிமையை வெளிப்படுத்தும் நோக்கில் ஆயிரக்கணக்கானோர் திரட்டப்படுகின்றனர்.
அமித்ஷா வருகைக்கு பின், தமிழக பாஜகவின் அடுத்த தேர்தல் திட்டங்களை அவர் நேரடியாக ஆய்வு செய்வார் எனவும் கூறப்படுகிறது. இந்த மாநாடு தமிழக அரசியலில் புதிய மாற்றத்துக்கு வழிவகுக்கும் என்று பாஜகவினரின் நம்பிக்கை அதிகரித்துள்ளது.