திருமங்கலம் : திருமங்கலம் அருகே கல்வெட்டுடன் கூடிய நடுகல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மதுரை, நாகரத்தினம் அங்காளம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வரவாற்றுத்துறை மாணவர்கள் தர்மராஜா, முரளிதரன் ஆகியோர், திருமங்கலம் அருகேயுள்ள உன்னிப்பட்டியில் மாலக்கோயிலில் கல்வெட்டுடன் கூடிய நடுகல் இருப்பதாக தகவல் கொடுத்தனர். இதனை தொடர்ந்து உதவி பேராசிரியர்கள் தாமரைக்கண்ணன், மாரீஸ்வரன், தொல்லியல் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்ளிட்டோர் நடுகல்லை ஆய்வு செய்தனர். அப்போது, அது நாயக்கர் காலத்து நடுக்கல் என தெரியவந்தது.
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: மாலக்கோயிலில் உள்ள நடுகல் மூன்றடி உயரமும், இரண்டடி அகலமும் கொண்ட பலகை கல்லில் புடைப்பு சிற்பமாக வணங்கிய நிலையில் ஒருவர் நின்றபடியான சிலையுடன் உள்ளது. அதில் இடதுபுறம் 11 வரிகள் கொண்ட தமிழ் எழுத்துகளில் நள வருடம் வைகாசி மாதம் 27ம் நாள் குல்லம்பட்டியை சேர்ந்த அச்சுப்ப நாயக்கர் மகன் மாரிநாயக்க சுப்பநாயக்கரின் கல் என எழுதப்பட்டுள்ளது.
இது மாரிநாயக்க சுப்ப நாயக்கர் இறப்பிற்கான நடுகல் என தெரியவருகிறது. இதில் மேலும் இரண்டு பெண் நடுகற்கள் காணப்படுகின்றன. அந்த பெண்கள் ஆடை, ஆபரணங்களுடன் இரு கரம் கூப்பி வணங்கியபடி நின்ற கோலத்தில் உள்ளனர். இந்த பெண்கள் கணவர் இறந்தபின்பு உயிர் துறந்திருக்கலாம் என, தெரியவருகிறது.
இந்த நடுகற்கள் இருக்கும் வளாகத்தில், சில வீர கற்களும் இடம் பெற்றுள்ளன. மற்றொரு நடுகல்லில் வீரன் ஒருவன் வணங்கிய நிலையில் காட்சியளிக்கிறார். மேலும் இங்கு சிற்பங்கள், கல்வெட்டுகள் என மொத்தமாக எட்டு நடுகற்கள் காணப்படுகின்றன. சிற்பங்களின் வடிவமைப்பை வைத்து இவை 17 அல்லது 18ம் நூற்றாண்டை சேர்ந்தவையாக இருக்கலாம் என தெரிகிறது. இவற்றின் வாயிலாக வீரம் மற்றும் ஒழுக்கத்தில் சிறந்தவர்களுக்கு நடுகல் வைத்து வழிபடும் வழக்கம், இந்த பகுதியில் இருந்திருக்கலாம் என கருத வேண்டியதாக உள்ளது. இவ்வாறு கூறினர்.