மதுரை: “ஜெயலலிதாவை இழிவுபடுத்தி பேசியதர்காக அமைச்சர் மோ.அன்பரசனை அமைச்சர் பதவியில் இருந்து முதல்வர் ஸ்டாலின் நீக்க வேண்டும்,” என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.
மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் கள்ளிக்குடி ஒன்றிய அதிமுக சார்பில் ஓடைப்பட்டியில் உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சி நேற்று (ஆகஸ்ட் 12) நடைபெற்றது. உறுப்பினர் அட்டையை முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வழங்கினார். அப்போது அவர், “அண்ணாமலைக்கு அசைன்மென்ட் கொடுப்பது அமித் ஷாவாக இருக்கட்டும். ஆனால் அதிமுக ஆட்சியில் அமர்த்திய 2 கோடி தொண்டர்களுக்கும் பழனிசாமி பணி நியமனம் செய்துள்ளார். அண்ணாமலைப் பணியால் என்ன நடக்கும் என்பது ஆண்டவனுக்குத்தான் தெரியும்.
ஆனால், அதிமுக தொண்டர்களின் இதயங்களில் இடம் பெற்றுள்ள இந்த பணி அதிமுகவை ஆட்சியில் அமர வைக்கும். யார் புதிதாக கட்சி தொடங்கினாலும் ஆட்சியை கைப்பற்றுவோம் என்று கூறுவார்கள். அதைப் பற்றி அதிமுக கவலைப்படவில்லை. பாஜக தொண்டர் கூட்டம், கட்சி கூட்டத்தில் அதிமுக பற்றி பேச உங்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது?. வரலாறு தெரியாதவர்கள் வாய்க்கு வந்ததை பேசுகிறார்கள்.
அண்ணாமலையின் பேச்சுக்கள் உண்மையான அதிமுக பக்தனின் நெஞ்சில் முள்ளு போன்றது. அதிமுக பற்றி பேசுவதை அண்ணாமலை நிறுத்த வேண்டும். திமுக ஆட்சியில் போலி மதுவால் 69 பேர் உயிரிழந்துள்ளனர். இதுபற்றி அண்ணாமலை தொடர்ந்து பேச மறுத்து வருகிறார். நேற்றைய மழையில் துளிர்விட்ட காளான் அல்ல அதிமுக. திரு.மோ.அன்பரசன் அமைச்சர் பதவி வகிக்க தகுதியற்றவர். தொடர்ந்து ஜெயலலிதாவை இழிவுபடுத்தி வருகிறார். அவரை அமைச்சர் பதவியில் இருந்து முதல்வர் ஸ்டாலின் நீக்க வேண்டும்,” என்றார்.