சென்னை: தமிழக அரசியலில் பாமக – பாஜக – அதிமுக கூட்டணி குறித்து பரபரப்பு நிலவிய நிலையில், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பைஜெயந்த் பாண்டாவை சந்தித்து முக்கிய ஆலோசனைகள் நடத்தியுள்ளார். அந்த சந்திப்பில், “பாமக இன்னும் NDA கூட்டணியில் தான் இருக்கிறது, எதிர்காலத்திலும் அந்த கூட்டணியில் இருந்தே நாங்கள் தேர்தல்களை சந்திப்போம்” என தெளிவாக அன்புமணி தெரிவித்தார்.

பாமகவில் 95% ஆதரவும் அன்புமணி மற்றும் ராமதாஸ் தரப்பில் உறுதியுடன் உள்ளது. சிலர் மட்டும் வேறு நிலைப்பாட்டில் உள்ளனர் என அவர் தெரிவித்தார். இதனால், பாமகவின் ஒன்றுமை கூட்டணிக்கு வலிமை சேர்க்கும் வகையில் இருக்கும் என்று பாஜகவும் கருதுகிறது. அமித்ஷா தரப்பில் ஒரு சர்வே கூட நடத்தப்பட்டு, பாமகவில் யாருக்கு அதிக செல்வாக்கு உள்ளது என்பதை ஆய்வு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சந்திப்பில் தேர்தல் தொகுதிகள் பற்றிய பேச்சுவார்த்தையும் நடைபெற்றது. அன்புமணி, “பாமகவுக்கு குறைந்தது 35 தொகுதிகள் ஒதுக்கப்பட வேண்டும். அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறும் ராஜ்யசபா தேர்தலில் ஒரு இடம் நிச்சயமாக வழங்கப்பட வேண்டும்” என வலியுறுத்தினார். இதற்கு பைஜெயந்த் பாண்டா, “தொகுதி ஒதுக்கீடு குறித்து மேலிடத்துடன் ஆலோசிக்கிறேன். ராஜ்யசபா இடம் குறித்து அதிமுக முடிவு செய்யும்” என பதிலளித்தார்.
மேலும், நடிகர் விஜயின் ‘தமிழக வெற்றி கழகம்’ கூட்டணியில் சேருமா என்ற கேள்விக்கும் பதில் சொல்லப்பட்டது. அன்புமணி, “விஜய் கூட்டணியில் சேர்ந்தாலும் பெரிய மாற்றம் ஏற்படாது என்பதே எங்கள் மதிப்பீடு” என குறிப்பிட்டார். இந்த சந்திப்பு 2026 சட்டமன்றத் தேர்தல் முன்னிட்டு NDA கூட்டணியின் அரசியல் சூழலை மேலும் சுவாரஸ்யமாக்கியுள்ளது.