சென்னை: “”தமிழகத்தின் முதன்மையான மற்றும் பழமையான பல்கலை, சென்னை பல்கலை., மற்ற பல்கலைகளுக்கு முன்னோடியாக திகழ வேண்டிய சென்னை பல்கலை, சரியான நேரத்தில் தேர்வு முடிவுகளை வெளியிடாததை மன்னிக்க முடியாது,” என, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறினார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள தன்னாட்சிக் கல்லூரிகள் மற்றும் பிற பல்கலைக்கழகங்களின் கீழ் உள்ள கல்லூரிகளில் முதுகலை மாணவர் சேர்க்கை முடிந்து வகுப்புகள் தொடங்கியுள்ள நிலையில், இளங்கலை இறுதிப் பருவத் தேர்வு முடிவுகள் சென்னைப் பல்கலைக்கழகத்துடன் இணைந்த தன்னாட்சி அல்லாத கல்லூரிகள் இன்னும் வெளியிடப்படவில்லை.
மாணவர்களின் உயர்கல்வி வாய்ப்பைப் பறிக்கும் சென்னைப் பல்கலைக்கழகத்தின் இந்த அலட்சியம் கண்டிக்கத்தக்கது. இளங்கலை படிப்புகளுக்கான முடிவுகள் ஜூன் நடுப்பகுதியில் வெளியிடப்படும். அப்போது தான், ஜூன் இறுதி அல்லது ஜூலை துவக்கத்தில், முதுகலை பட்டப்படிப்புக்கான மாணவர் சேர்க்கையை முடித்து, வகுப்புகள் துவங்க முடியும். தமிழகத்தில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் சென்னை பல்கலைக்கழக தன்னாட்சி கல்லூரிகளில் இளங்கலை பட்டப்படிப்பு தேர்வு முடிவுகள் உரிய நேரத்தில் வெளியிடப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில் முதுகலை மாணவர் சேர்க்கையும் முடிந்துள்ளது.
சென்னைப் பல்கலைக்கழகத்தின் 108 தன்னாட்சி அல்லாத கல்லூரிகளின் தேர்வு முடிவுகள் இன்னும் வெளியிடப்படாததால், கல்லூரிகளில் இளங்கலைத் தேர்வு எழுதிய மாணவர்கள் மற்ற கல்லூரிகளில் சேர முடியாமல் தவித்து வருகின்றனர். இனி அவர்கள் படித்த கல்லூரிகளில் மட்டுமே சேர முடியும். மற்ற கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்களும் அந்தக் கல்லூரிகளில் சீட்களைப் பெறப் போட்டியிடுவார்கள், அதனால் அவர்களுக்கு கடும் போட்டி ஏற்படும். இதனால் பல மாணவர்கள் உயர்கல்வி கற்கும் வாய்ப்பை இழக்க நேரிடும். இது திராவிட மாதிரியா?
சென்னைப் பல்கலைக்கழகம் தமிழ்நாட்டின் முதன்மையான மற்றும் பழமையான பல்கலைக்கழகமாகும். மற்ற பல்கலைக்கழகங்களுக்கு முன்னோடியாக திகழ வேண்டிய சென்னைப் பல்கலைக்கழகம், தேர்வு முடிவுகளை உரிய நேரத்தில் வெளியிடாததை மன்னிக்க முடியாது. பல்கலைக்கழகத்தில் நிலவும் கடும் நிதி நெருக்கடியும், பல மாதங்களாக துணைவேந்தர் பதவி காலியாக இருப்பதும் இந்த நிலைக்கு காரணம். இந்த சீரழிவுகளுக்கு திமுக அரசு பொறுப்பேற்க வேண்டும்.
சென்னைப் பல்கலைக்கழகத்தின் தன்னாட்சி இல்லாத கல்லூரிகளின் முடிவுகளை சென்னைப் பல்கலைக்கழகம் உடனடியாக வெளியிட வேண்டும். சென்னைப் பல்கலைக் கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள தன்னாட்சிக் கல்லூரிகளில், முதுநிலைப் பட்டப் படிப்புகளில் கூடுதல் இடங்களை உருவாக்கி, அதில் சென்னைப் பல்கலைக்கழக மாணவர்கள் படிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
சென்னை பல்கலைக்கு புதிய துணைவேந்தரை நியமித்து, நிதி நெருக்கடியை தீர்க்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்றார்.