சென்னை: அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கை:- தமிழக காவல்துறைக்கு 1299 சப்-இன்ஸ்பெக்டர்கள் தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு இன்று தொடங்கியது. சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு 10 மாதங்கள் தாமதமாக அறிவிக்கப்பட்டதால், அதற்கேற்ப வயது வரம்பில் சலுகைகள் வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இது செய்யப்படவில்லை.
ஏற்கனவே அறிவித்தபடி கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தால், கடந்த ஆண்டு ஜூலையில் 30 வயது பூர்த்தியான இளைஞர்கள் ஆட்சேர்ப்பில் பங்கேற்றிருப்பார்கள். அந்த வாய்ப்பை கடந்த ஆண்டு பறித்த தமிழக அரசு, இந்த ஆண்டு வழங்க குறைந்தபட்சம் ஓராண்டு வயது வரம்பை உயர்த்தியிருக்க வேண்டும். இதேபோல், கடந்த ஆண்டு டிசம்பர் 11-ம் தேதி நிலவரப்படி, தமிழக காவல்துறையில் மொத்தம் 2219 போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்கள் காலியாக உள்ளன.

அந்த எண்ணிக்கை இப்போது 2600ஐத் தாண்டியிருக்கலாம். 621 சப்-இன்ஸ்பெக்டர்கள் நியமனம் நிலுவையில் உள்ள நிலையில், குறைந்தது 2000 சப்-இன்ஸ்பெக்டர்களையாவது தேர்வு செய்ய வேண்டும். ஆனால், அவர்களில் மூன்றில் ஒரு பங்கிற்கும் குறைவான 1299 பேர் மட்டுமே தேர்வு செய்யப்பட உள்ளனர். இது போதாது.
காவல் துறையின் பலம் மற்றும் தேர்வர்களின் நலன் கருதி, சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான வயது வரம்பை பொதுப் பிரிவினருக்கு 33 ஆகவும், பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 35 ஆகவும், பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினருக்கு 38 ஆகவும் உயர்த்த வேண்டும். அதேபோல் தேர்வு செய்யப்படுவோரின் எண்ணிக்கையை 2000 ஆக உயர்த்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.