சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கை தற்போது சிறப்பு புலனாய்வு குழு (எஸ்ஐடி) விசாரித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், இந்த வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் வலியுறுத்தியுள்ளார்.
தமிழிசை சௌந்தரராஜன் தலைமையில் குஷ்பு, ராதிகா உள்ளிட்ட பாஜக மகளிர் அணியினர் இன்று ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து வழக்கு தொடர்பான மனுவை அளித்தனர். ஆளுநரை சந்தித்த பின், நிருபர்களுக்கு பேட்டி அளித்த தமிழிசை சௌந்தரராஜன், “தமிழகத்தில் பா.ஜ.,வினர் போராட்டம் நடத்த அனுமதி இல்லை.
குறிப்பாக, பா.ஜ.க. பெண்கள் போராட்டம் நடத்தினால், கைது செய்து, ஆட்டு தொழுவத்தில் அடைத்து வைக்கப்படுகின்றனர், தி.மு.க., அரசு. திமுக கூட்டணி கட்சி என்பதால் வைகோவை சுதந்திரமாக போராட்டம் நடத்த திமுக அனுமதிக்கிறது.
மேலும் பேசிய தமிழிசை சௌந்தரராஜன், “தமிழகத்தில் தற்போது அறிவிக்கப்படாத எமர்ஜென்சி நிலவுகிறது. இதை ஏற்கனவே கூறியுள்ளேன். அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கை முழுமையாகவும் வெளிப்படையாகவும் விசாரிக்க வேண்டும் என்றால் சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும்.இதற்கான கோரிக்கையை நான் ஆளுநருக்கு தெரிவித்தேன்” என கூறினார்.