சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோர்களிடம் அதிக மின் கட்டணத்தை வசூலித்ததை குறித்துத் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடும் விமர்சனங்களை வெளியிட்டுள்ளார். திமுக அரசு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறி வருவதாகவும், தொழில் துறையினரை ஏமாற்றுவதாகவும் அவர் குற்றச்சாட்டினார்.
அவர் வெளியிட்ட அறிக்கையில், 12kw மின்சுமைக்குக் குறைவாகப் பயன்படும் தொழில்களுக்கான மின் கட்டணத்தை குறைக்க முதல்வர் 2023ல் அறிவித்தபோதும், இது இன்னும் நடைமுறைக்கு வரவில்லை. அதே நேரத்தில், மேலதிக கட்டணத்தை வசூலித்துவந்த மின்சார வாரியம், இது தொடர்பான மாற்றத்தை தானாக நடைமுறைக்கு கொண்டு வர மாட்டோம் என்றும், தொழில் நிறுவனங்கள் தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும் என்றும் கூறுகிறது என்றார்.
கோயம்புத்தூரில் மட்டும் 52,367 சிறு தொழில்களிடம் மின்சார கட்டண உயர்வால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தொழில்முனைவோர் அமைப்புகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்தும், மாற்றம் தாமதமாகி வருகிறது. 12kw மின்சுமையைப் பயன்படுத்தும் நிறுவனங்கள் தற்போது ரூ.9.60 வரை கட்டணம் செலுத்துகின்றன; மாற்றம் மேற்கொண்டால், இது ரூ.4.65 ஆக குறையும்.
அண்ணாமலை, திமுக அரசிடம் இவ்வாறு வலியுறுத்தினார்: தானியங்கி முறையில் குறைந்த கட்டண பிரிவுக்கு மாற்றம் செய்ய வேண்டுமென தொழில் துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், கடந்த ஒன்றரை ஆண்டுகளில் வசூலித்த அதிக கட்டணத்தை திருப்பி வழங்க திமுக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.