கோவை மாவட்டம் காளப்பட்டியில் நிலம் வாங்கியதைச் சுற்றி பல குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தாமே முன்வந்து விளக்கம் அளித்துள்ளார். தனது அறிக்கையில் அவர் “Ex IPS” என மட்டுமே குறிப்பிட்டுள்ளார்.
அண்ணாமலை கூறியதாவது: இயற்கை விவசாயம் மீது எனக்கு இருக்கும் ஆர்வத்திற்காக, “We the Leaders” அறக்கட்டளை வழியாக பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறேன். அதற்காகவே கடந்த ஜூலை மாதம் விவசாய நிலத்தை வாங்கினேன். இதற்கான தொகையை எனது சேமிப்பு மற்றும் கடன் மூலம் செலுத்தியுள்ளேன். பதிவு செய்யும் நாளில் நான் நேரடியாகச் செல்லவில்லை என்றாலும், சட்டப்படி பவர் ஆஃப் அட்டார்னி மூலம் சொத்தை வாங்க முடியும் என அவர் தெளிவுபடுத்தினார்.

இந்த நிலத்தின் பதிவு கட்டணமாக ரூ.40,59,220 செலுத்தியதாகவும், மத்திய அரசின் PMEGP திட்டத்தின் கீழ் பால் பண்ணை அமைக்க கடனுக்கும் விண்ணப்பித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். தனது அடுத்த ஆண்டு வருமான வரி அறிக்கைகளில் இதற்கான தகவல்கள் வெளிப்படும் என்றும் கூறினார்.
மேலும் இளைஞர்களின் தொழில் ஆர்வத்தை ஊக்குவிக்க ஒரு முதலீட்டு நிறுவனம் தொடங்கும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகிறேன் என தெரிவித்தார். அரசியல் வாழ்க்கை காரணமாக குடும்பத்துடன் செலவிட முடியாத நேரத்தை இப்போது வணிக முயற்சிகள் மூலம் சமநிலை செய்து வருவதாகக் கூறியுள்ளார். “என் அனைத்து செயல்களும் சட்டப்படி மற்றும் நேர்மையாகவே நடந்துள்ளன. குறை கூறுபவர்கள் நேரத்தை வீணாக்காமல் பயனுள்ள செயல்களில் ஈடுபடுங்கள்” எனக் கூறி தனது விளக்கத்தை நிறைவு செய்தார்.