சென்னை: தமிழக பள்ளிக் கல்வித் துறை உண்மையில் மாணவர்களின் பாதுகாப்புக்காக செயல்படுகிறதா அல்லது திமுகவினர் நடத்தும் தனியார் பள்ளிகளுக்கு மாணவர்களை ஈர்க்கும் பணியில்தான் ஈடுபடுகிறதா என பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
திருச்சி மாவட்டம் துறையூர் ஒன்றியத்தில், 30 லட்சம் ரூபாய் செலவில் புதிதாக கட்டப்பட்ட அரசு ஆரம்பப் பள்ளி கட்டிடத்தின் மேற்கூரை திறப்பதற்கு முன்பே இடிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக மாணவர்கள் பள்ளிக்கு வருவதற்கு முன் இந்த விபத்து நிகழ்ந்ததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அண்ணாமலை, “குழந்தைகளின் உயிரை பணயம் வைத்து திமுக அரசு ஊழலில் மூழ்கியுள்ளது. ஒப்பந்ததாரர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை?” எனக் கேள்வி எழுப்பினார்.

அதேபோல், கடந்த ஜூலை மாதம் கூடலூரில் பலத்த காற்றுடன் பெய்த மழையில், தேவாலா அரசு மேல்நிலைப் பள்ளியின் கூரை பறந்து அருகிலுள்ள வீட்டில் விழுந்தது. இதையும் அண்ணாமலை சுட்டிக்காட்டி, “ஆட்சிக்கு வந்தவுடன் 10,000 புதிய பள்ளிகள் கட்டுவோம் என்ற திமுக, கடந்த நான்கு ஆண்டுகளில் இடிந்து விழும் பள்ளிகளையே அதிகமாக உருவாக்கியுள்ளது. இது கல்வித் துறையின் அவல நிலையை காட்டுகிறது” எனக் குற்றம்சாட்டினார்.
அரசுப் பள்ளிகளின் மாணவர் சேர்க்கை நாளுக்கு நாள் குறைந்து கொண்டிருக்கும் சூழலில், இத்தகைய விபத்துகள் தொடர்வது ஏழை, எளிய மாணவர்களின் பாதுகாப்பையே கேள்விக்குறியாக்குகிறது. இதற்கெல்லாம் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் உடனடியாக விளக்கம் அளிக்க வேண்டும் என அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.