கோவை: கோவை திருவிழாவின் 17-வது விழா நேற்று துவங்கியது. வரும் 1-ம் தேதி வரை நடைபெறும் இவ்விழாவில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. அதன் ஒரு பகுதியாக பழங்கால கார் கண்காட்சி மற்றும் அணிவகுப்பு ரேஸ்கோர்சில் உள்ள காஸ்மோபாலிட்டன் கிளப்பில் நேற்று நடந்தது. இதனை கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இதில், செவர்லெ, மெர்சிடிஸ் பென்ஸ், ரோல்ஸ்ராய்ஸ், ஃபோர்டு, அம்பாசிடர், பத்மினி, ஃபோக்ஸ்வேகன் உள்ளிட்ட கார்கள் காட்சிப்படுத்தப்பட்டன. கோவை, பல்லடம், திருப்பூர், அன்னூர், பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கார் ஆர்வலர்கள் தங்களது பழங்கால கார்களை கொண்டு வந்தனர். இந்த கண்காட்சி சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பு பார்வையாளர்களையும் கவர்ந்தது. இதில், 1931 முதல் 1981 வரையிலான கார்கள் பங்கேற்று, கோவை சாலைகளில் அணிவகுத்தன.
மக்கள் ஆர்வமுடன் பார்த்தனர். இதில் மொத்தம் 40 கார்கள் கலந்து கொண்டன. இந்த கார்கள் லட்சுமி மில் நகர மையத்தில் மாலை 5 மணி வரை பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தன. இதனை காண ஏராளமானோர் குடும்பத்துடன் வந்திருந்தனர். இதில், 1960-ம் ஆண்டு அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட செவர்லெ காரில் ஆட்டோமேட்டிக் கியர் இருந்தது. இடது பக்கம் ஸ்டீயரிங் வீல் இருந்த அந்த கார் அணிவகுத்து சென்ற போது அனைவரையும் கவர்ந்தது.