சென்னை: இந்தியா முழுவதும் உள்ள அப்பல்லோ மருத்துவமனைகளில் 25 லட்சம் பேரிடம் உடல் பரிசோதனை செய்ததில் பலர் வெளியுலகுக்கு தெரியாத கடுமையான நோய்களால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இவர்களில் 26% பேர் உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களாகவும், 23% பேர் நீரிழிவு நோயாளிகளாகவும் கண்டறியப்பட்டுள்ளனர். இந்த ஆய்வின் மூலம் 257 பேருக்கு கல்லீரல் கொழுப்பு பரிசோதனை செய்யப்பட்டதில் 65% பேருக்கு கல்லீரல் கொழுப்பு இருப்பது தெரியவந்துள்ளது.

இவர்களில் 85% பேர் மது அருந்தாதவர்கள். 46% பேருக்கு ஆரம்ப நிலைகளில் அறிகுறியற்ற கரோனரி தமனி நோய் உள்ளது. சர்க்கரை நோய் 14%லிருந்து 40% ஆக அதிகரித்துள்ளது. உடல் பருமன் 76% லிருந்து 86% ஆக அதிகரித்துள்ளது. குழந்தைகள், மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களில் 28 சதவீதம் பேர் அதிக எடை அல்லது பருமனாக உள்ளனர். அவர்களில் 19 சதவீதம் பேருக்கு உயர் ரத்த அழுத்தம் உள்ளது. ஊட்டச்சத்து குறைபாடுகளில், 77% பெண்களும், 82% ஆண்களும் வைட்டமின் டி குறைபாட்டுடன் உள்ளனர்.
தமிழகத்தில் 29% பேருக்கு சர்க்கரை நோய் உள்ளது. 37% பேர் நீரிழிவு நோயின் வாசலில் உள்ளனர். 63% முதன்மை கல்லீரல் கொழுப்பு உள்ளது. 25 சதவீதம் பேருக்கு உயர் ரத்த அழுத்தம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 62% பேர் பருமனானவர்கள். 17 சதவீதம் பேர் அதிக எடை கொண்டவர்கள். அது மட்டுமின்றி, 80 சதவீதம் பேருக்கு எலும்பு ஆரோக்கியம், உடல் வலிமை, நோய் எதிர்ப்பு சக்தி ஆகியவை பாதிக்கப்பட்டுள்ளன.
41 சதவீத மக்களில் இரத்த சோகை காணப்படுகிறது. அறிகுறிகள் தோன்றும் வரை மக்கள் காத்திருக்க வேண்டாம். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என அப்பல்லோ மருத்துவமனை கூறியுள்ளது.