சென்னை: தமிழகத்தின் அனைத்து போக்குவரத்து கழகங்களிலும் 2014ம் ஆண்டுக்கு பிறகு புதிய டிரைவர்கள், கண்டக்டர்கள் நியமிக்கப்படவில்லை. இதனால் பேருந்துகளை இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டது.
தற்காலிக தீர்வாக மாநகர போக்குவரத்து கழகத்தில் பணிமனை பணிகளை மேற்கொள்ள தனியார் நிறுவனம் மூலம் 234 டிரைவர்கள், கண்டக்டர்கள் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டனர். இதற்கு தொழிற்சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இந்நிலையில், இந்த வழித்தடத்தில் பேருந்துகளை இயக்க ஒப்பந்த நிறுவனங்கள் மூலம் டிரைவர், கண்டக்டர்களை நியமிக்க டெண்டர் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மாநகர போக்குவரத்து கழக பஸ்களை இயக்க, டிரைவர், கண்டக்டர் பணிக்கு தகுதியான ஒப்பந்ததாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நிறுவனம் சார்பில் 700 டிரைவர்கள், 500 கண்டக்டர்கள் நியமிக்கப்பட வேண்டும்.
ஓட்டுநர்களுக்கு ரூ.27,934, கண்டக்டர்களுக்கு ரூ.27,597 குறைந்தபட்ச ஊதியமாக பிஎப், இஎஸ்ஐ உள்ளிட்டவை வழங்க வேண்டும். 11 மாதங்கள் ஆரம்ப ஒப்பந்த காலம். ஒப்பந்தம் கோருவதற்கான விண்ணப்பங்களை ஆகஸ்ட் 28ஆம் தேதி பிற்பகல் 2.30 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து, அரசுப் போக்குவரத்து ஊழியர் சங்க (சிஐடியு) பொதுச் செயலர் வி.தயானந்தம் கூறும்போது, “இடஒதுக்கீட்டைப் பறிக்கும் வகையில் தனியார் நிறுவனங்கள் மூலம் ஊழியர்களை நியமிக்கும் செயலை சிஐடியு வன்மையாகக் கண்டிக்கிறது. இதுபோன்ற தனியார்மயத்தை கண்டித்து வரும் 6ம் தேதி அரசியல் கட்சி தலைவர்கள் பங்கேற்கும் கருத்தரங்குக்கு ஏற்பாடு செய்துள்ளோம் என்றார்.