தஞ்சாவூர்: மனநிலையிலும் உடல் நிலையிலும் பாதிக்கப்பட்ட மனிதனை மீட்டு வாழ்வு கொடுப்பது என்பது உலகத்தில் இதை விட உன்னதமான சேவை எதுவும் இல்லை என்றுதான் கூற வேண்டும் என் உச்ச நீதிமன்ற நீதியரசர் மகாதேவன் புகழாரம் சூட்டினார்.
தஞ்சாவூர் ஸ்ரீகாமாட்சி மெடிக்கல் சென்டரின் மூன்றாம் ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. விழாவில் மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் மருத்துவர் இனியன் வரவேற்புரையாற்றினார். மருத்துவமனை துணை மருத்துவ கண்காணிப்பாளர் மருத்துவர் எஸ்.தீபக் நாராயணன் விளக்கஉரையாற்றினார்.
விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்ட உச்ச நீதிமன்ற நீதியரசர் ஆர்.மகாதேவன் குத்துவிளக்கேற்றி மக்களுக்கு சேவையாற்றிய மருத்துவர்கள், ஊழியர்களுக்கு பரிசுகளை வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது: வாழ்கிற வாழ்க்கையை நோயற்ற வாழ்க்கையாக வாழ்வதற்கு இயக்கக்கூடிய இந்த உடலை பேணுவதற்கு எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்பதை ஒவ்வொவரும் மனதில் கொள்ள வேண்டும். நம் உடல் சிறப்பாக இருந்தால் மட்டுமே வாழ்க்கை அடுத்தக் கட்டத்துக்கு தொடரும் என ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பாடப்பட்டுள்ளது. இது மருத்துவத்தின் இன்றியமையாத தன்மையை உலகுக்கு எடுத்துக்காட்டியுள்ளது.
உலகம் முழுவதும் மருத்துவமனை சார்ந்த சிந்தனைகள் எழுந்து மனித குலத்தை காக்க பல்வேறு மாற்றம் கண்டார்கள். மாற்றத்தின் வழியாக வந்தது தான் நவீன தொழில்நுட்ப மருத்துவ பிரிவுகள். அதன்படி தனித்தனியான சிகிச்சை முறைகளை கண்டுபிடித்து பல்வேறு பிரிவுகளாக மருத்துவ உலகம் வளர்ந்து நிற்கிறது. இந்த மருத்துவமனையில் நுழைந்தபோது வியப்பின் உச்சத்திக்கே சென்றேன். மனிதத்தை நேசிக்க கூடிய சிந்தனையின் அடிப்படையில் மருத்துவமனை இயங்குகிறது.
நீங்கள் யாருக்கு எதை வேண்டுமானாலும் வழங்கலாம். மனநிலையிலும்,உடல் நிலையிலும் பாதிக்கப்பட்ட மனிதனை அந்த பாதிப்பில் இருந்து மீட்டு உன்னத வாழ்வு கொடுத்தால் அதைவிட உலகத்தில் உன்னதமான சேவை எதுவும் இல்லை. இத்தகைய சேவையை செய்து வரும் ஸ்ரீகாமாட்சி மருத்துவமனை 100 ஆண்டுகள் நிலைத்து நிற்கும். இவ்வாறு பேசினார்.
மக்களுக்கு சேவையாற்றிய மருத்துவர்கள், ஊழியர்களுக்கு சிறப்பு பரிசுகளை சிறப்பு விருந்தினர் நீதியரசர் வழங்கினார். இணை நிர்வாக இயக்குனர் டாக்டர் மு.இன்பன் நன்றியுரையாற்றினார். முன்னாள் உணவுத்துறை அமைச்சர் காமராஜ், லதா மகேஸ்வரி, மூத்த ஆலோசகர் டாக்டர் மோகன், தொழிலதிபர் அண்ணாமலை, டாக்டர் அக்சயா இனியன், டாக்டர் ரத்னா இன்பன் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவமனை ஊழியர்கள், பொதுமக்கள் என சுமார் 2000 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.