சென்னை: சொந்த வீடு என்பது நடுத்தர மக்களின் கனவாக உள்ளது. இதற்காக நிலத்தை வாங்கும் போது மோசடி பேர்வழிகள் ஏமாற்றுவதும் இப்போது அதிகளவில் நடக்கிறது. எனவே விழிப்புணர்வுடன் நிலம் வாங்கும் போது இவற்றை கவனிக்க வேண்டும்.
மனை வாங்கும் விஷயத்தில், விழிப்புடன் இருப்பது அவசியம். டீ.டி.சி.பி.,/எல்.பி.ஏ., தொழில்நுட்ப அனுமதி வழங்கப்பட்டுள்ளதா என, தெளிவு பெற்ற பின்னரே வாங்க வேண்டும்.
தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் அனுமதி பெறப்பட்டுள்ளதா என கண்டு, அதன் ஆவணங்களை சரிபார்க்க வேண்டும்.
மனைப்பிரிவு சாலைகள், பூங்கா ஒதுக்கீட்டு இடங்கள், சம்பந்தப்பட்ட உள்ளாட்சிக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளதா என சரிபார்க்க வேண்டும். கூடுமான வரை, டீ.டி.சி.பி.,/எல்.பி.ஏ., ஒப்புதல் பெற்ற மனை வரைபடம் மற்றும் அத்துடன் உள்ள நிபந்தனைகளை, நன்கு படித்து சம்பந்தப்பட்ட இடம், வருவாய் துறையின் அரசாணையின்படி முழுமையாக உள்ளதா என்று தெளிவடைந்த பின்னரே வாங்க வேண்டும்.
அனுமதியற்ற மனைப்பிரிவில், தனி மனைகள் வாங்கும்போது, தனிப்பட்ட முறையில் சம்பந்தப்பட்ட மனைப்பிரிவுக்கு, ‘சிங்கிள் பிளாட் பிரேம் ஒர்க்’ எண் வழங்கப்பட்டு, முறைப்படுத்தப்பட்ட பின்னரே, தனித்த மனைக்கு உள்ளாட்சியில் கட்டட அனுமதி வழங்கப்படும்.
மனை வாங்கும்போது, தொல்பொருள் ஆராய்ச்சி கழகத்துக்கு உட்பட்ட பகுதி போன்று, வேறு ஏதேனும் அரசு அறிவிப்புகள் உள்ளனவா என, நன்கு விசாரித்து அறிந்து கொள்ள வேண்டும். அனைத்து உள்ளாட்சிகளுக்கும், 750 மீட்டர் வரை குடியிருப்பு கட்டடம் கட்டிக்கொள்ளும் வகையில் அனுமதி வழங்க, அரசாணை வழங்கப்பட்டுள்ளது.
ஒருவர் எந்த பிரச்னையும் இன்றி, சொந்த வீடு கட்டி அமைதியாக வாழ அரசு ஆணைகள், வழிகாட்டுதல்களை முறையாக கடைபிடிக்கும், பொறியாளர்களை தேர்வு செய்வது முக்கியம்.
நாம் சொத்து வாங்கும் போது அல்லது விற்கும் போது அந்தக் கிரயப் பத்திரத்தை (Sale Deed) சார்பதிவாளர் (Sub- Registration Office) அலுவலகத்தில் தான் பதிவு செய்ய வேண்டும்.
வருவாய்த்துறையில்தான் நிலத்திற்கான விவரங்கள் கீழ்க்கண்ட பதிவேட்டில் இருக்கும். பட்டா (Patta), சிட்டா (Chitta), அடங்கல் (Adangal), அ’ பதிவேடு (‘A’ Register), நிலத்திற்கான வரைபட எல்லை (FMB). இதை முழுமையாக கவனிக்க வேண்டும்.
நிலத்தின் உரிமை நமக்கு தான் இருக்கிறது என்பதற்கான ஆதாரம் பட்டாவாகும். பட்டாவை வைத்துதான் ஒரு நிலத்தின் உரிமை யாருக்கு என்பதை முடிவு செய்யப்படுகிறது.
பட்டாவில் மாவட்டத்தின் பெயர், வட்டத்தின் பெயர் மற்றும் கிராமத்தின் பெயர்., பட்டா எண், உரிமையாளர் பெயர், புல எண்ணும் உட்பிரிவும் (Survey Number and Subdivision), நன்செய் நிலமா அல்லது புன்செய் நிலமா, நிலத்தின் பரப்பு மற்றும் தீர்வை போன்றவை இருக்கும்.
ஒரு தனி நபருக்குக் குறிப்பிட்ட கிராமத்தில் எவ்வளவு நிலம் இருக்கிறதென்று அரசாங்கம் வைத்திருக்கும் பதிவேடுதான் சிட்டா. இதில் சொத்தின் உரிமையாளர் பெயர், பட்டா எண்கள், நிலம் நன்செய் அல்லது புன்செய் பயன்பாடு, தீர்வை கட்டிய விவரங்கள் எல்லாம் இருக்கும்.
ஒரு கிராமத்தில் இருக்கிற மொத்த சர்வே எண்கள் அடங்கிய பதிவேடுதான் அடங்கல். இதில் குறிப்பிட்ட சர்வே எண்ணுக்கு உரிய நிலம் யார் பெயரில் இருக்கிறது, பட்டா எண் மற்றும் நிலத்தின் பயன்பாடு என்பன போன்ற விவரங்கள் இதில் இருக்கும்.