டெல்லி: மத்திய வங்கக் கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. மத்திய மேற்கு மற்றும் அதை ஒட்டிய வடமேற்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது.
தமிழகத்தின் ஒரு சில இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசா கடலோரப் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவி வருவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், காஞ்சி, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று வடகிழக்கில் ஒரு சில இடங்களிலும், தென்கிழக்கில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்காலிலும் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும்.
மேலும், ஓரிரு இடங்களில் மணிக்கு 30-40 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும். 26-ம் தேதி தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும். 27 மற்றும் 28-ம் தேதிகளில் தமிழகம், புதுவை, காரைக்காலில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும்.
29.09.2024 முதல் 30.09.2024 வரை தமிழகம் மற்றும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும். தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை ஒரு சில இடங்களில் இயல்பை விட 2-4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும்.
அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் ஒன்று அல்லது இரண்டு இடங்களில் அசௌகரியத்தை ஏற்படுத்தலாம். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மற்றும் மின்னலுடன் லேசான/மிதமான மழை பெய்யக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸாகவும் இருக்கும்.