தொழிற்சாலைகளில் பாதுகாப்பான பணிச்சூழலை உருவாக்கவும் கண்காணிக்கவும் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த வேண்டும் என தமிழக அரசின் தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறை இயக்குநர் எஸ்.ஆனந்த் தெரிவித்துள்ளார். மணலியில் சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் (சிபிசிஎல்) சார்பில் 54-வது தேசிய பாதுகாப்பு வார நிறைவு விழா நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் தமிழக அரசின் தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறை இயக்குநர் எஸ்.ஆனந்த் பேசியதாவது: தொழிற்சாலைகளில் சிறிய விபத்து நடந்தாலும், விரிவான ஆய்வு நடத்த வேண்டும். இதுபோன்ற சம்பவம் மீண்டும் நிகழாமல் இருக்க, விபத்துக்கான உண்மையான காரணங்களை கண்டறிந்து சரி செய்ய வேண்டும். தொழிலாளர்களின் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியத்தை பாதிக்கும் எந்தவொரு மீறலுக்கும் தொழிற்சாலையின் உரிமையாளர் மற்றும் மேலாளர் பொறுப்பு.

பாதுகாப்பான பணிச்சூழலை உருவாக்கவும் கண்காணிக்கவும் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். பேசுகையில், தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறை இணை இயக்குநர் எம்.வி. கார்த்திகேயன், “நமது நாட்டின் வளர்ச்சிக்கு பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வு காரணிகள் மிகவும் முக்கியம். சிபிசிஎல் நிறுவனம் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கும் மருத்துவப் பரிசோதனையை விரிவுபடுத்தியிருப்பது பாராட்டுக்குரியது.
பாதுகாப்பு மேலாண்மை அமைப்பில் தொழிலாளர்கள் தீவிரமாக பங்கேற்க வேண்டும். சிபிசிஎல் இயக்குநர் (தொழில்நுட்பம்) எச்.சங்கர் தனது சிறப்புரையில், சர்வதேச எண்ணெய் மற்றும் எரிவாயு கூட்டமைப்பு உருவாக்கிய 9 உயிர்காக்கும் விதிகளை எடுத்துரைத்தார். முன்னதாக, நிறுவனத்தின் முதன்மை பொது மேலாளர் வி.ஸ்ரீராம் வரவேற்று பேசினார். இயக்குநர் (செயல்பாடு) பி.கண்ணன் பாதுகாப்பு உறுதிமொழியை வழங்கினார்.
துணைப் பொது மேலாளர் ராஜேந்திர ஜே.பரசுராம்குமார் 2024-25-ம் ஆண்டுக்கான பாதுகாப்பு அறிக்கையை வாசித்தார். முடிவில், நிறுவனத்தின் பொது மேலாளர் ராஜ்குமார் நன்றி கூறினார். விழாவில் பாதுகாப்பு விதிகளை சிறப்பாக பின்பற்றி பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டன.