சென்னை: தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் முட்டுக்காடு பகுதியில் 37.99 ஏக்கரில் சர்வதேச கண்காட்சிகள் மற்றும் சர்வதேச கூட்டங்கள் நடத்தும் வகையில் நவீன வசதிகளுடன் கூடிய உலகத்தரம் வாய்ந்த ‘கலைஞர் சர்வதேச அரங்கம்’ அமைக்கப்படும் என 2023-ல் அறிவித்தார்.
அதன்படி, இத்திட்டத்தின் கீழ் ரூ. 525 கோடியில், 5,000 இருக்கைகள் கொண்ட மாநாட்டு அரங்கம், 10,000 பேர் அமரும் வகையில் கண்காட்சி அரங்கம், கூட்ட அரங்குகளுக்கான அரங்கம் ஆகியவை அமைக்கப்பட உள்ளன. திறந்தவெளி அரங்கு, உணவகங்கள், சுமார் 10,000 வாகனங்கள் நிறுத்தும் வசதி, சாலை வசதி, நுழைவு வாயில், சுற்றுச்சூழல் வசதிகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் உலகத்தரம் வாய்ந்த இந்த சர்வதேச அரங்கம் அமைக்கப்படும். இந்த மைதானத்தை 2025 இறுதி அல்லது 2026-ம் ஆண்டு தொடக்கத்தில் கட்டி முடிக்க பொதுப்பணித்துறை திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில், பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ. வேலு நேரில் சென்று பணியின் தற்போதைய நிலை மற்றும் கூடுதலாக செய்ய வேண்டிய பணிகள் குறித்து ஆய்வு செய்தார். மேலும் பணியின் நிலை குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆய்வின் போது, பொதுப்பணித்துறை கூடுதல் தலைமை செயலாளர் மங்கத் ராம் சர்மா, பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை உயர் அதிகாரிகள், தலைமை பொறியாளர்கள் மற்றும் பலர் உடனிருந்தனர்.