பாலியல் குற்றங்கள் தொடர்பான பெற்றோர்-ஆசிரியர் சந்திப்பு மார்ச் 26-ம் தேதி நடத்தப்பட வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு, பள்ளிக் கல்வித் துறை இயக்குனரகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழகத்தில், அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் நலன்கருதி, பள்ளி அளவில், பெற்றோர் – ஆசிரியர் சங்க கூட்டம் நடத்தப்படுகிறது.
அதன்படி, மார்ச், 26-ல், அனைத்து பள்ளிகளிலும், பெற்றோர் – ஆசிரியர் சங்க கூட்டம் நடத்த வேண்டும். இக்கூட்டங்களில், குழந்தைகளை, பாலியல் தொல்லைகளில் இருந்து பாதுகாக்கும் வகையில், குழந்தைகளை பாதுகாப்பாக தொடுதல், பாதுகாப்பற்ற முறையில் தொடுதல், பாலியல் துன்புறுத்தல் போன்றவை குறித்து விவாதிக்க வேண்டும். மேலும், பிரச்சாரங்கள் மூலம் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

மேலும், பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும் மாணவர்களுக்கு பாதுகாப்பான மற்றும் ஆதரவான சூழலை உருவாக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். பாலியல் துன்புறுத்தல்களைப் பற்றி மக்களுக்குத் தங்கள் நம்பிக்கையைத் தெரிவிப்பதன் முக்கியத்துவத்தை ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு உணர்த்த வேண்டும்.
முதல்வர் மற்றும் ஆசிரியர்களைக் கொண்ட மாணவர் பாதுகாப்பு ஆலோசனைக் குழு, மாணவர் மனநலக் குழு, மாணவர்களின் உடல்நலம் குறித்தும் இந்தக் கூட்டங்களில் விவாதிக்கப்பட வேண்டும். இந்தக் கூட்டங்களை சிறந்த முறையில் நடத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். இவ்வாறு ஆவணத்தில் கூறப்பட்டுள்ளது.