சென்னை: தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு (ஆவின்) தமிழக மக்களுக்கு பால் மற்றும் பால் பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. ஆவின் மூலம் தினமும் 30 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. இந்த பால் கொழுப்பின் அடிப்படையில் பல வகைகளாக பிரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இதுதவிர, தமிழகம் முழுவதும் உள்ள 27 யூனியன்கள் மூலம் மோர், ஐஸ்கிரீம் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட பால் பொருட்கள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு, ஆவின் பால்பண்ணைகள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் மூலம் விற்பனை செய்யப்படுகிறது.

இந்நிலையில் இந்த ஆண்டு கோடையை முன்னிட்டு மோர், ஐஸ்கிரீம், லஸ்ஸி உள்ளிட்ட பொருட்களின் விற்பனையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, ஆவின் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: இந்தாண்டு, கோடை சீசனில், ஆவின் பால் பொருட்கள் விற்பனையை, 20 சதவீதம் வரை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
குறிப்பாக, ஐஸ்கிரீம், மோர் விற்பனையை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அனைத்து பால் கடைகளிலும் ஆவின் ஐஸ்கிரீம், மோர் தடையின்றி கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், அம்பத்தூர் உள்ளிட்ட பல்வேறு தொழிற்பேட்டைகளில் உள்ள நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு மோர், ஐஸ்கிரீம் உள்ளிட்ட ஆவின் தயாரிப்புகளை மொத்தமாக விநியோகம் செய்வது குறித்து பேசி வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.