சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான 3 பேரின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் ஜூலை 5-ம் தேதி படுகொலை செய்யப்பட்டார்.
ஆம்ஸ்ட்ராங் கொலையில் இதுவரை 28 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மீது சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சென்னை கோடம்பாக்கத்தைச் சேர்ந்த விக்னேஷ்குமார், விஜயகுமார், திருவள்ளூர் நத்தமேடு நகரைச் சேர்ந்த சதீஷ்குமார் ஆகியோர் ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த கொலைக்கும் தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என அவர்கள் மனுவில் குறிப்பிட்டுள்ளனர். இந்த மனு முதன்மை நீதிமன்ற அமர்வு நீதிபதி எஸ்.கார்த்திகேயன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, மாநகர குற்றவியல் வக்கீல் தேவராஜன் ஆஜராகி, மனுதாரர்கள் 3 பேரும் வெடிமருந்து உள்ளிட்ட ஆபத்தான ஆயுதங்களை வைத்திருந்ததாகவும், அவர்கள் மீது குண்டர் தடுப்பு பிரிவு வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்ததாகவும் கூறினார்.
எனவே, குற்றவாளிகள் 3 பேருக்கும் ஜாமீன் வழங்கக் கூடாது என்று கோரிக்கை விடுத்தார். இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி 3 பேரின் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.