தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே திருமலை சமுத்திரத்தில் இயங்கி வரும் சாஸ்த்ரா நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் பஜாஜ் பொறியியல் திறன் பயிற்சி மையம் அமைக்கப்பட்டது.
சாஸ்த்ரா நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இளைஞர்களுக்கான முக்கியப் பொறியியல் திறன்களை மேம்படுத்துவதற்கான பஜாஜ் பொறியியல் திறன் பயிற்சி மைய திறப்பு விழா நடந்தது.. இதில் பங்கேற்ற தொழிற்கல்வி மற்றும் பயிற்சிக்கான தேசிய கவுன்சிலின் முன்னாள் தலைவர் டாக்டர்.என்.எஸ்.கல்சி பேசுகையில், பிரதான கல்வியில் திறமையை இணைப்பது அறிவுப் பொருளாதாரத்தை வளப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் உற்பத்தியையும் அதிகரிக்கிறது. உலகளாவிய உற்பத்திப் பங்கில் இந்தியாவின் உயர்வை உறுதி செய்ய உற்பத்தித் திறனின் முக்கியத்துவத்தும் தேவை என்று கூறினார்.
பஜாஜ் ஆட்டோ லிமிடெட் இன் தலைமை மனிதவள அதிகாரி ரவி கிரண் ராமசாமி பேசுகையில், பஜாஜ் ஆட்டோவின் முதன்மை முயற்சியான இந்த திறன் பயிற்சி மையம் மூலம் திறன் பயிற்சியில் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் கவனம் செலுத்துகிறது. பஜாஜ் ஆட்டோவின் மூத்த தலைவர்கள் மற்றும் பொறியாளர்களால் உருவாக்கப்பட்ட உலகத் தரம் வாய்ந்த ஆய்வக அமைப்பு மூலம், சாஸ்த்ராவில் உருவாக்கப்பட்ட இந்த மையம் வளர்ந்து வரும் சிறுநகரங்களில் உள்ள பொறியியல் பட்டதாரிகள் மற்றும் டிப்ளமோ படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
பஜாஜ் ஆட்டோ ஒவ்வொரு ஆண்டும் சுமார் 10,000க்கும் மேற்பட்ட பொறியியல், டிப்ளமோ பட்டதாரிகளுக்கு பயிற்சி அளிக்கும் திறன் கொண்ட 15 மையங்களுக்கு இத்திட்டத்தை விரிவுபடுத்தும். மேலும் அடுத்த 3 ஆண்டுகளுக்கு இந்தத் திட்டத்திற்காக ரூ.350 கோடி செலவிட உறுதிபூண்டுள்ளது என்றார்.
தொடக்க விழாவின் போது, டிவிஎஸ், பிரேக்ஸ் இந்தியா, பெல்ரைஸ் நிறுவனம், எம்.எம் போர்ஜிங், இந்தியா பிஸ்டன்ஸ், போன்ற 15 க்கும் மேற்பட்ட தொழில் பங்குதாரர்கள் இம்மையத்தில் பயிற்சி பெற்ற பட்டதாரிகளை பணியமர்த்துவது மட்டுமின்றி, அவர்களின் பணியாளர்களை இம் மையத்தின் மூலம் மேம்படுத்தும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
இந்த திறன் மேம்பாட்டு மையம் மேம்பட்ட உற்பத்தி தொழில்நுட்பங்கள் மற்றும் தொழில்துறையின் அதிநவீன பயிற்சி வசதிகளுடன் உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது, 150க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயிற்சி பெறுகின்றனர். பொறியியல் மாணவர்களுக்கு வழங்கப்படும் இன்டர்ன்ஷிப் செமஸ்டர் கிரெடிட்டுகளுக்கு இணையானதாக, சாஸ்த்ராவின் இந்த பாடத்திட்டம் உள்ளது. மேலும் அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. கல்வி உதவித்தொகை கொண்ட இந்த பயிற்சியில் சமூக, பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் அணுகலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாஸ்த்ராவின் துணைவேந்தர் டாக்டர்.எஸ்.வைத்தியசுப்பிரமணியம் வரவேற்றார், பஜாஜ் ஆட்டோவின் ஜி.சுதாகர் நிகழ்ச்சியின் சிறப்பம்சங்களை வழங்கினார். பஜாஜ் ஆட்டோவின் உலகத்தரம் வாய்ந்த இந்த பயிற்சியை பயிற்சி பெற்ற பேராசிரியர்கள் மூலம் வழங்க சாஸ்த்ரா உறுதியளிக்கிறது. இந்த ஒத்துழைப்பு, இளைஞர்களின் திறன்களை மேம்படுத்துவதிலும், நாட்டிற்கான திறமையான வளங்களை மேம்படுத்துவதிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும்.