தேசிய கல்விக் கொள்கையில் இந்தி மொழி கட்டாயமாக்கப்படவில்லை என அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் இ.பாலகுருசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- 21-ம் நூற்றாண்டில் இந்தியாவின் கல்வித் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் விரிவான திட்டங்களுடன் தேசிய கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டது. அதில் எங்கும் ஹிந்தி கட்டாயப் பாடமாக்கப்படவில்லை. அரசியலமைப்பில் உள்ளபடி எந்தவொரு இந்திய மொழியையும் மூன்றாம் மொழியாகக் கற்பிக்க பரிந்துரைக்கிறது.
எனவே, தமிழக அரசு திராவிட மொழிகளான தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் ஒன்றை மாணவர்களுக்கு கற்பிக்க முடியும். மேலும், மும்மொழித் திட்டம் மற்ற மொழிகளைக் கற்க நல்ல வாய்ப்பாகவும் இருக்கும். அதேபோல், நம் நாட்டின் பல்வேறு பகுதிகளில் பேசப்படும் இந்தி மொழியை நம் மாணவர்கள் கற்றுக்கொண்டால் கூடுதல் பலன்கள் கிடைக்கும். 60 ஆண்டுகளுக்கும் மேலாக மாணவர்கள் தமிழ் தவிர வேறு எந்த இந்திய மொழியையும் கற்க விடாமல் தடுத்துள்ள ஒரே மாநிலம் தமிழ்நாடுதான்.
இருமொழிக் கொள்கைகள் இருப்பதால், ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்கள் கூடுதல் மொழியைக் கற்கும் வாய்ப்பு மறுக்கப்படுகிறது. அதே நேரத்தில், சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் சேரும் பணக்கார, நகர்ப்புற மாணவர்கள் தாங்கள் விரும்பும் மொழியைக் கற்கும் உரிமையைப் பெறுகிறார்கள். குறிப்பாக மும்மொழி திட்டத்தை எதிர்ப்பவர்களின் குழந்தைகள் ஹிந்தியை மகிழ்ச்சியுடன் படிக்கின்றனர். பெரும்பாலான அரசியல் தலைவர்கள் தேசியக் கல்விக் கொள்கையின் உண்மையான நோக்கத்தை சரியாகப் புரிந்து கொள்ளவில்லை அல்லது அரசியல் நோக்கத்தைக் கொண்டிருக்கலாம். தமிழக அரசியல் தலைவர்கள் எதையும் தர்க்க கண்ணோட்டத்தோடும், ஆய்வு நோக்கத்தோடும் அணுகுவதில்லை.
மக்களை ஏமாற்றுவதற்கு எளிதான வழியைக் கையாள்கின்றனர். இத்தகைய குறுகிய நோக்குடைய தலைவர்கள் கல்வியின் தரம் அல்லது மாணவர்களின் தேவைகளை அறிவார்ந்த அணுகுமுறை பற்றி கவலைப்படுவதில்லை. எனவே, தங்களின் சுயலாபத்திற்காக வாக்கு வங்கி அரசியலில் ஈடுபடும் இந்த அரசியல்வாதிகளின் கபட நாடகத்திற்கு பொதுமக்களும், மாணவர்களும் பலியாக வேண்டாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.