சென்னை: மயிலாப்பூர் நிதி நிறுவன மோசடி வழக்கில் தேவநாதன் யாதவின் 5 வங்கி கணக்குகளை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முடக்கியுள்ளனர்.
சென்னை, மயிலாப்பூர் தெற்கு மாட வீதியில், ‘தி மைலாப்பூர் ஹிந்து பெர்மனன்ட் ஃபண்ட் லிமிடெட்’ என்ற பெயரில், 150 ஆண்டுகள் பழமையான நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிதி நிறுவனத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிரந்தர வைப்பு உறுப்பினர்கள் உள்ளனர்.
இதில் முதலீடு செய்தவர்களில் சுமார் 525 கோடி ரூபாயை நிதி நிறுவனம் திருப்பித் தர மறுத்ததாக பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். குறிப்பாக, வாடிக்கையாளர்களுக்கு வட்டித் தொகையும், முதிர்வுத் தொகையும் கிடைக்கவில்லை என்ற புகார் எழுந்தது. இந்நிலையில், பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் 144 பேர், சென்னை அசோக் நகரில் உள்ள தமிழ்நாடு காவல் துறையின் பொருளாதார குற்றப்பிரிவில் ரூ.24.5 கோடி மோசடி செய்ததாக புகார் அளித்துள்ளனர். அதன்படி கடந்த 12ம் தேதி தனிப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இதனையடுத்து நிதி நிறுவன நிர்வாக இயக்குனர் தேவநாதன் யாதவ், இயக்குனர்கள் குணசீலன், மகிமை நாதன் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதையடுத்து, தேவநாதன் யாதவ் தொடர்புடைய மயிலாப்பூர் நிதி நிறுவனம், அவர் நடத்தும் தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தில் உள்ள அறை, தி.நகரில் உள்ள வீடு உள்பட அவருக்கு தொடர்புடைய 12 இடங்களில் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் சோதனை நடத்தினர். அப்போது, பல்வேறு முக்கிய ஆவணங்கள் சிக்கியது.
இந்த வழக்கில் தேவநாதன் மற்றும் அவர் தொடர்பான 5 வங்கி கணக்குகளை போலீசார் முடக்கியுள்ளனர். விசாரணை நடந்து வருகிறது.