சென்னை: நாடு முழுவதும் நேற்று ரம்ஜான் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டது. இந்நிலையில், ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு வங்கிகள் வழக்கம் போல் செயல்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. அதாவது 2024-25 நிதியாண்டு நேற்றுடன் முடிவடைந்தது. 2025-26 புதிய நிதியாண்டு இன்று தொடங்க உள்ளது.
இதன் காரணமாக, 2024-25 நிதியாண்டுக்கான கணக்குகளை முடிக்க வேண்டியது அவசியம். எனவே மார்ச் 31-ம் தேதி வங்கிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டது.இதுகுறித்து வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி சுற்றறிக்கை அனுப்பியிருந்தது. அதில், ‘நிதியாண்டின் கடைசி நாளான மார்ச் 31-ம் தேதி, வரி செலுத்துவோருக்கு உதவும் வகையிலும், சுமூகமான நிதிப் பரிவர்த்தனைகளை உறுதி செய்யும் வகையிலும் வங்கிகள் செயல்பட வேண்டும் என்று அறிவித்திருந்தது.

குறிப்பாக, அரசு ரசீதுகள் மற்றும் பணம் செலுத்தும் வங்கிகள் வழக்கமான நேரப்படி திறந்திருக்க வேண்டும். இதற்கு வங்கி ஊழியர்கள் ஒருபுறம் எதிர்ப்பு தெரிவித்தாலும், மறுபுறம் பல்வேறு காரணங்களால் வேலைக்குச் செல்லும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். இதனால் நேற்று தமிழகம் முழுவதும் வங்கிகள் வழக்கம் போல் இயங்கின. அதுவும் ஒரு சில கட்டுப்பாடுகளுடன் வங்கிகள் இயங்கின.
அதாவது, வருமான வரி, ஜிஎஸ்டி, சுங்கம் மற்றும் கலால் வரி, ஓய்வூதியம் மற்றும் அரசு மானியங்கள், அரசு சம்பளம் மற்றும் இதர பரிவர்த்தனைகள், அரசு திட்டங்கள் தொடர்பான பரிவர்த்தனைகள், மானியங்கள் உள்ளிட்ட அரசு வரிகள் செலுத்தும் பணி நேற்று வங்கிகளில் நடைபெற்றது. இதேபோல், வருமான வரித்துறையும் வரி தொடர்பான பணிகள் எந்த இடையூறும் இல்லாமல் தொடர்ந்து நடைபெற முக்கிய நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி நேற்று நாடு முழுவதும் வருமான வரித்துறை அலுவலகங்கள் வழக்கம் போல் இயங்கின.