தர்மபுரி/மேட்டூர்: தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று மாலை வினாடிக்கு 6,000 கனஅடி நீர்வரத்து இருந்தது. இந்நிலையில், காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் மழையால், ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
நேற்று மதியம் வினாடிக்கு 17 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து மாலையில் 19 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. நீர்வரத்து மேலும் அதிகரிக்கக் கூடும் என்பதால், பரிசல் இயக்க குளிப்பதற்கும் தடை விதித்து மாவட்ட ஆட்சியர் சாந்தி உத்தரவிட்டுள்ளார்.
தொடர் விடுமுறையால் நேற்று ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்தது. ஆனால் அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். சிலர் ஆற்றில் பாதுகாப்பான இடங்களில் குளித்தனர்.
பருவ மழையால் டெல்டா பாசனத்துக்கு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது. அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு கடந்த 11-ம் தேதி காலை 15 ஆயிரம் கன அடியாக இருந்த தண்ணீர் நேற்று மாலை 7 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டது.
அதேபோல், கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்துக்கு நீர் திறப்பு வினாடிக்கு 700 கன அடியில் இருந்து நேற்று 500 கன அடியாக குறைக்கப்பட்டது. மேட்டூர் அணைக்கு நேற்று நீர்வரத்து வினாடிக்கு 6,445 கன அடியாக இருந்தது.
அணையின் நீர்மட்டம் 89.26 அடியாகவும், நீர் இருப்பு 51.81 டிஎம்சியாகவும் இருந்தது.