சென்னை: சென்னை ஐசிஎஃப் ஆலையில் இதுவரை 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பல்வேறு வகையான பெட்டிகள் தயாரிக்கப்பட்டுள்ளன. தற்போது இங்கு வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. தெற்கு ரயில்வேயில் 8 வழித்தடங்கள் உட்பட இதுவரை 75-க்கும் மேற்பட்ட வந்தே பாரத் ரயில் சேவைகள் நாட்டின் முக்கிய வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகின்றன. இதற்கு பயணிகளிடம் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
வந்தே பாரத் ரயில்களில் இருக்கை வசதி உள்ளது. இதனால் பகலில் மட்டுமே இயக்கப்படுகிறது. இதனிடையே, ஸ்லீப்பர் வசதியுடன் தயாரிக்கப்பட்ட புதிய வந்தே பாரத் ரயில் விரைவில் ரயில்வே வாரியத்திடம் ஒப்படைக்கப்பட உள்ளது. இதையடுத்து சென்னை ஐசிஎப் ஆலையில் ஸ்லீப்பர் வசதியுடன் கூடிய 50 வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதுகுறித்து ஐ.சி.எப். அதிகாரிகள் கூறியதாவது:-

முதல் நீண்ட தூர ஸ்லீப்பர் வந்தே பாரத் ரயில் விரைவில் ரயில்வே வாரியத்திடம் ஒப்படைக்கப்படும். இதன் பிறகு 50 ரயில்கள் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் முதற்கட்ட பணிகள் முடிவடைந்து, வரும் நிதியாண்டில் பணிகள் தொடங்கும் என தெரிகிறது. பல்வேறு ரயில்வே மண்டலங்கள் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்களின் பட்டியலை வாரியத்திடம் சமர்ப்பித்து வருகின்றன. 16 பெட்டிகள், 20 பெட்டிகள் மற்றும் 24 பெட்டிகள் என 3 வகையான ரயில்கள் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்கும் இயந்திரப் பணிகள் விரைவில் முடிவடையும். எலக்ட்ரானிக் வேலைகளை முடிக்க சிறிது நேரம் எடுக்கும். எனவே, இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் 50 வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்களை தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இது தவிர, ரயில்வேயின் மற்ற தொழிற்சாலைகளிலும் வந்தே பாரத் வகை ரயில்களை தயாரிப்பதற்கான உள்கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டு வருகிறது.