சென்னை: பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை, சர்வதேச அரசியலை படிக்க, ஆக்ஸ்போர்டு பல்கலையில் சேர உள்ளார். இதற்காக ஆகஸ்ட் 28ம் தேதி லண்டன் செல்ல திட்டமிட்டுள்ளார்.
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தற்போது தமிழகம் முழுவதும் பயணம் செய்து கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். அதே சமயம் சர்வதேச அரசியல் படிப்பதற்காக லண்டன் சென்று அது தொடர்பான வேலைகளையும் கவனித்து வருகிறார். அண்ணாமலை லண்டனில் 3 மாதங்கள் தங்கி அங்குள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் சர்வதேச அரசியல் படிப்பார்.
இந்நிலையில், அண்ணாமலை லண்டன் சென்றால், தமிழக பா.ஜ.,வில், மாநில தலைவர் மாற்றப்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும், இது தொடர்பாக டெல்லி தலைமையும் ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அண்ணாமலை ஆகஸ்ட் 28ஆம் தேதி லண்டன் செல்வதாகவும், செப்டம்பர் 2ஆம் தேதி முதல் அவர் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் படிப்பைத் தொடர்வார் என்றும் பாஜக மூத்த நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், அண்ணாமலை லண்டன் சென்றாலும், கட்சிப் பணிகளை அங்கிருந்து பார்த்துக் கொள்வார் என்றும் கூறப்படுகிறது. மேலும், 2026ல் நடக்கும் சட்டசபை தேர்தலில் அண்ணாமலை தலைவராக நீடிப்பார் என்றும், தேசிய தலைமையும் அதையே விரும்புவதாகவும் மூத்த நிர்வாகிகள் தெரிவித்தனர். இதற்கிடையில், பா.ஜ.,வின் மாநில அமைப்புச் செயலர் கேசவ விநாயக், வழக்கம் போல், கட்சியின் அமைப்பு பணிகளை கவனிப்பார். மேலும், அவருடன் ஆலோசனை நடத்தி கட்சியின் முக்கிய முடிவுகளை எடுப்போம் என்றும் தெரிவித்தனர்.