சென்னை புளியந்தோப்பு ஆட்டுத்தொட்டி பகுதியில் நடைபெற்ற ‘அன்னம் தரும் அமுதக் கரங்கள்’ என்ற அன்னதான நிகழ்ச்சியில் சென்னை மேயர் பிரியா ராஜன் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சிக்கு முன்பாக அந்த பகுதியில் பிளீச்சிங் பவுடருக்கு பதிலாக சுண்ணாம்பு மற்றும் கோலமாவு தெளிக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இதுபற்றி செய்தியாளர்கள் மேயரிடம் நேரில் கேள்வி எழுப்பினர்.

செய்தியாளர்கள் சிலர் மேயரிடம் பவுடர் மாதிரியை காட்டி, இது பிளீச்சிங் பவுடரா என்று கேட்டனர். அதனை முகர்ந்த மேயர் பிரியா, இது பிளீச்சிங் பவுடர்தான், வாசனையிலேயே தெரிகிறது என்று பதிலளித்தார். எனினும் சிலர் பிளீச்சிங் பவுடருக்கு வாசனை இல்லை என்றும், சுண்ணாம்பு தெளிக்கப்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டினர்.
இந்தத் தருணத்தில் மேயர் பிரியா, அரசு கொள்முதல் செய்யும் பிளீச்சிங் பவுடரே மாநகராட்சி பகுதிகளில் பயன்படுத்தப்படுவதாக கூறினார். மேலும், பவுடரின் தரம் குறித்தும் சுண்ணாம்பு தெளிக்கப்பட்டது உண்மையா என்றும் விசாரணை நடத்த உத்தரவிடப்படும் என சிரித்தபடியே தெரிவித்தார்.
பின்னர், செய்தியாளர் ஒருவரின் தொடர்ந்த கேள்விகளுக்கு பதிலளிக்க சிரித்தபடியே “பிளீச்சிங் பவுடர் இல்லாம பாண்ட்ஸ் பவுடரா இது?” என்று கேள்வியோடு பதிலளித்தார். மேலும், “யார் நீங்க?” என்று கேட்டதோடு கேமராவை ஆப் செய்யுமாறும் கூறினார். இதனால் சலசலப்பு ஏற்பட்டது. மேயர் பிரியாவின் இந்த பதில்கள் தற்போது இணையத்தில் வைரலாகி, பலரிடையே சர்ச்சையை உருவாக்கியுள்ளன.