திருபுவனம் பகுதியில் நடந்த அஜித் குமார் மரணம் தொடர்பான காவல்துறை துயர சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக விமர்சகர் ப்ளூ சட்டை மாறன், அரசு மற்றும் போலீசாரை கடுமையாக விமர்சித்து, பல முக்கியமான கேள்விகளை எழுப்பியுள்ளார்.
அதிகாரத்தின் ஆணவத்தால், சாதாரண நகை வழக்கில் சந்தேகத்தின் பெயரில் ஒரு இளைஞர் இப்படி அடித்து கொல்லப்படுவது எந்த அரசியலமைப்புக்கும் ஏற்றது அல்ல என அவர் சுட்டிக்காட்டுகிறார். குறிப்பாக, புகார் அளித்த பெண் இன்று வரை விசாரணைக்கு கூட ஆளாகாதது ஏன்? அவரின் பின்னணி பற்றி ஏன் எந்த தகவலும் வெளியடவில்லை என்ற கேள்வியை எழுப்பியுள்ளார்.

மேலும், FIR பதிவு செய்யப்படாத நிலையில், எப்படி காவல்துறை அஜித் குமாரை விசாரணைக்கு அழைத்தது? அவரை தாக்கிய வீடியோ எங்கே இருந்து வந்தது? அந்த வீடியோ எடுக்கும் போது யார் யார் அங்கு இருந்தனர்? என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியதை அவர் நினைவூட்டினார்.
ப்ளூ சட்டை மாறன், அனைத்து காவல் நிலையங்களிலும் CCTV பொருத்தப்பட வேண்டும் என்பது பல ஆண்டுகளாக பேசப்படுவது போல், அதற்கான நடைமுறை என்ன நிலையில் இருக்கிறது என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். முக்கிய வழக்குகளிலேயே எப்படி CCTV வேலை செய்யாமல் இருக்கிறது என்ற சந்தேகமும் அவர் வலியுறுத்துகிறார்.
அத்துடன், விசாரணை என்ற பெயரில் பொதுமக்கள் மீது அராஜகமாக நடக்கும் தாக்குதல்களுக்கு எதிராக, சட்டப்படி கடும் நடவடிக்கைகள் மற்றும் நீதிமன்றத்தின் நிரந்தர உத்தரவுகள் அவசியம் என்கிறார்.
உயிரிழந்த பிறகு தான் அரசு வேலை, நிதி உதவி, சிபிஐ விசாரணை என அறிவிப்பது சரியானது என்றாலும், இத்தகைய கொடூர சம்பவங்களை தடுக்க பாதுகாப்பு முறைமைகள் அமல்படுத்தப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். அஜித் குமாரின் மரணம் பொதுமக்களின் மனதில் காவல்துறை மீதான நம்பிக்கையை சீர்குலைக்கும் வகையில் உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.