சென்னை சர்வதேச விமான நிலையத்தில் நேற்று காலைபொழுது அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதில், விமான நிலையத்தில் உள்ள கழிவறைகள் மற்றும் விஐபி ஓய்வறைகளில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது என்றும், அது வெடிக்கும் முன் அனைவரும் வெளியேற வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த தகவலை விமான கட்டுப்பாட்டு அறை முதலில் பெற்றதும் உடனடியாக பாதுகாப்பு அதிகாரிகள், விமான நிலைய இயக்குநர், மத்திய தொழில் பாதுகாப்புப் படை (CISF), போலீசாருடன் ஆலோசனை நடத்தினர். தொடர்ந்து விமான நிலையத்தை சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய்கள் மூலம் விமான நிலையத்தின் அனைத்து பகுதிகளும் தீவிரமாக சோதனையிடப்பட்டன.
தீவிர சோதனைகள் – வெடிகுண்டு ஏதும் இல்லை
மின்னஞ்சலில் குறிப்பிடப்பட்ட பகுதிகள் மட்டும் அல்லாது, விமானம் நிறுத்தும் இடம், எரிபொருள் நிரப்பும் பகுதி, பயணிகள் அமரும் அரங்கம் என அனைத்தும் சிறிதும் புறக்கணிக்காமல் சோதனைக்குட்படுத்தப்பட்டன. பல மணி நேரம் சோதனை நடத்தப்பட்டபோதிலும் எந்தவொரு வெடிபொருளும் கண்டுபிடிக்கப்படவில்லை. இது வெறும் வதந்தி மின்னஞ்சலாக இருந்தது என்பது உறுதி செய்யப்பட்டது.
விசாரணையில் போலீசார்
இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மின்னஞ்சலை அனுப்பிய மர்ம நபரை கண்டறிய சைபர் கிரைம் பிரிவும் சேர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. தேவையற்ற பீதியைத் தவிர்க்குமாறு பாதுகாப்பு அதிகாரிகள் பொதுமக்களுக்கு தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர்.
முடங்கிய விமான சேவை
இந்த மிரட்டலால் ஹாங்காங், சிங்கப்பூர், துபாய் உள்ளிட்ட இடங்களுக்கு செல்ல வேண்டிய சில சர்வதேச விமானங்கள் சுமார் ஒரு மணி நேரம் தாமதமாக புறப்பட்டன. பயணிகள் தங்களுடைய உடைமைகளை பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை செய்தனர்.
விஜய் மற்றும் முதலமைச்சருக்கும் மிரட்டல்
இதேநேரம், நடிகர் விஜய் மற்றும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வீட்டிற்கும் வெடிகுண்டு மிரட்டல் வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இது போன்ற தொடர்ச்சியான மிரட்டல்களால் பொதுமக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். பாதுகாப்பு ஏற்பாடுகள் மாநிலம் முழுவதும் தீவிரமாக்கப்பட்டுள்ளன.