சென்னை: பிரிட்டிஷ் நிறுவனத்தின் சொகுசு கப்பல் ‘எம்வி ஹெப்ரிடியன் ஸ்கை’ சென்னை துறைமுகம் வந்தடைந்தது. சர்வதேச சொகுசு கப்பல்கள் சென்னை துறைமுகத்திற்கு அவ்வப்போது வந்து செல்கின்றன. இந்நிலையில், பிரிட்டிஷ் நிறுவனத்தின் சொகுசு கப்பல் ‘எம்வி ஹெப்ரிடியன் ஸ்கை’ நேற்று முன்தினம் சென்னை துறைமுகம் வந்தது. இலங்கையின் திருகோணமலையில் இருந்து வந்த இந்த உல்லாசக் கப்பலில் 92 பயணிகள் மற்றும் 76 பணியாளர்கள் இருந்தனர்.
120 பயணிகள் வரை பயணிக்கக் கூடிய இந்த உல்லாசக் கப்பலில் நீச்சல் குளம், இரவு விடுதி, 59 சொகுசு அறைகள் உள்ளிட்ட சர்வதேச தரத்திலான வசதிகள் உள்ளன. இந்தக் கப்பலில் வந்த சுற்றுலாப் பயணிகள் சாந்தோம் தேவாலயம், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில், கோட்டை அருங்காட்சியகம், மெரினா கடற்கரை ஆகிய சுற்றுலாத் தலங்களை பார்வையிட்டனர். கப்பல் பயணத்தை முடித்துக் கொண்டு நேற்று இலங்கைக்கு புறப்பட்டது.
இதுகுறித்து, சென்னை துறைமுக அறக்கட்டளை தலைவர் சுனில் பாலிவால் கூறுகையில், “வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சென்னை துறைமுகம், இந்தியாவில் சர்வதேச சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் செயல்பட்டு வருகிறது. மத்திய, மாநில அரசுகளின் உதவியுடன் சென்னை துறைமுகத்தில் உள்ள சுற்றுலா முனையம் பல்வேறு வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் சர்வதேச சுற்றுலா மையமாக சென்னை திகழ்கிறது’’ என்றார்.