சென்னை: குமரி திருவள்ளுவர் சிலையின் வெள்ளி விழாவை முன்னிட்டு டிசம்பர் 31 மற்றும் ஜனவரி 1 ஆகிய தேதிகளில் வெள்ளி விழா நிகழ்ச்சிகளை நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதையொட்டி, திருக்குறளின் அழகை குறும்படங்கள், ரீல்கள், ஏஐ, டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் மூலம் உணர்த்தும் வகையில், சமூக வலைதளங்களில் பள்ளி மாணவர்களுக்கு கட்டுரைப் போட்டிகளும், கல்லூரி மாணவர்களுக்கு ஓவியப் போட்டிகளும் நடத்தப்பட உள்ளன.
இதுபோன்ற நிகழ்வுகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில், சென்னை பல்லவன் சாலையில் புகைப்படங்கள் ஒட்டப்பட்ட 10 விரைவு பேருந்துகளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். வள்ளுவர் சிலை வெள்ளி விழா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த 10 பேருந்துகள் தமிழகம் மற்றும் பெங்களூரு முழுவதும் 38 மாவட்டங்களுக்கு பயணிகள் பேருந்துகளாக இயக்கப்படும்.
தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் எம்.பி. சாமிநாதன், சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சென்னை நகர மேயர் ஆர்.பிரியா, போக்குவரத்துச் செயலர் க.பனீந்திர ரெட்டி, செய்தித் துறைச் செயலர் வே.ராஜாராமன், மாநகரப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் அல்பி ஜான் வர்க்கீஸ், செய்தி மக்கள் தொடர்பு இயக்குநர் இரா.வைத்திநாதன், தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் நா. அருள், நிலைக்குழு தலைவர் நே.சிற்றரசு உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.