ஓசூர்: மராத்தி பேசாததால் நடத்துனர் தாக்கப்பட்டதை கண்டித்தும், காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டு அணை கட்ட தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்ததை கண்டித்தும் கர்நாடகாவில் கன்னட அமைப்பினர் இன்று முழு கடையடைப்பு அறிவித்துள்ளனர். இரு மாநில காவல்துறையினரின் பாதுகாப்புடன் தமிழக பேருந்துகள் வழக்கம் போல் இயக்கப்படுகின்றன. பிப்ரவரி 21 அன்று, கர்நாடக மாநிலம் பெலகாவியில், கர்நாடக மாநில அரசு பேருந்து நடத்துனர் ஒருவரை மராத்தி பேசாத காரணத்தால் அங்குள்ள மராட்டிய அமைப்பினர் தாக்கினர்.
இதற்கு கர்நாடகாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியதுடன், கன்னட அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்தன. இது கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா இடையே மொழிப் பிரச்னையாகவும் உருவெடுத்துள்ளது. இந்நிலையில், அங்கு கன்னட அமைப்பினர் இன்று முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்திருந்தனர். அதேபோல் காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டு அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து வரும் தமிழகத்தை கண்டித்து இந்த முழு கடையடைப்பு நடத்தப்படும் என கன்னட அமைப்புகள் அறிவித்திருந்தன.

இதனால் பேருந்துகள் மற்றும் ஆட்டோக்கள் இயங்காத நிலையில், கர்நாடக மாநில அரசு முழு அடைப்புக்கு ஆதரவளிக்காததால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாமல் இருக்க கர்நாடக மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கர்நாடகாவில் இன்று நடைபெற உள்ள அரசு தேர்வுகள் வழக்கம் போல் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாத வகையில் இரு மாநில போலீஸ் பாதுகாப்புடன் தமிழகம் – கர்நாடகா இடையே போக்குவரத்து வழக்கம் போல் இயக்கப்படுகிறது.
ஆனால், இன்று காலை தமிழக-கர்நாடக மாநில எல்லையான அத்திப்பள்ளியில், தமிழகத்துக்கு எதிராக கோஷம் எழுப்பியும், காவிரி நதி தங்களுக்குச் சொந்தமானது என்று கூறி தமிழக எல்லைக்குள் செல்ல முயன்ற 20க்கும் மேற்பட்ட கன்னட அமைப்பினரை போலீஸார் கைது செய்தனர். முழு அடைப்பு காரணமாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை எனினும், பாதுகாப்பு காரணங்களுக்காக போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இதேபோல், ஓசூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை உத்தரவின் பேரில் தமிழக எல்லைப் பகுதியான கிருஷ்ணகிரி ஜூஜுவாடி பகுதியிலும் தமிழக போலீஸார் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.