தமிழகத்தில் ஆட்சேபனையற்ற புறம்போக்கு நிலங்களில் நீண்ட காலமாக குடியிருந்து வரும் 86,000 பேருக்கு பட்டா வழங்க தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த தீர்மானம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்டு, அதற்கான பணிகள் விரைவில் தொடங்கும் என்று வருவாய்த் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
சென்னையைச் சுற்றியுள்ள 4 மாவட்டங்களில் ‘பெல்ட் ஏரியா’ என அழைக்கப்படும் 32 கிலோமீட்டர் பகுதியில் ஆக்கிரமிப்பு செய்து குடியிருப்பவர்கள் பல ஆண்டுகளாக பட்டா பெற முடியாமல் இருந்துள்ளனர். இந்த பிரச்சனை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதை தொடர்ந்து, அவர்களுக்கு பட்டா வழங்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
சென்னையில் மட்டும் 29,187 பேருக்கு பட்டா இல்லாமல் குடியிருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இந்த பட்டாக்கள் விரைவாக வழங்கப்பட வேண்டும் என்பதால், இதில் மாவட்ட அளவிலும் மாநில அளவிலும் குழுக்கள் அமைத்து பணிகளை துரிதப்படுத்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
மதுரை, திருநெல்வேலி உள்ளிட்ட மாநகராட்சிகளில் இருந்தும் இதே போன்ற புகார்கள் வந்துள்ளதால், அந்த இடங்களிலும் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். மாநகராட்சி, நகராட்சி மற்றும் மாவட்ட தலைநகரப் பகுதிகளில் வசிக்கும் 57,084 பேருக்கு பட்டா வழங்கும் பணிகள் மேற்கொள்ளப்படும். இதனால் மொத்தம் 86,000 பேருக்கு பட்டா வழங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, 6 மாதங்களுக்குள் முழுமையாக நிறைவேற்றப்படும்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கடந்த ஆண்டுகளில் மட்டும் 10.26 லட்சம் பேருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளதாகவும், வருங்காலத்தில் இதை மேலும் விரைவுபடுத்தி 6.29 லட்சம் பேருக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
அரசு நிலங்கள், நீர்நிலைகள், மேய்க்கால் நிலங்கள் போன்ற ஆட்சேபத்துக்குரிய இடங்களில் பட்டா வழங்க முடியாது. நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட தடை காரணமாக அந்த இடங்களில் பட்டா வழங்கும் பணிகள் நடத்தப்பட மாட்டாது. இருப்பினும், அரசு அனுமதியுள்ள இடங்களில் குடியிருப்போர் பட்டா பெற விண்ணப்பிக்கலாம். அவர்களின் மனுக்களை அரசு குழு பரிசீலம் செய்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.
இந்த தீர்மானம் ஏற்கனவே பட்டா பெற முடியாமல் சிரமப்பட்டுவரும் மக்களுக்கு பெரிய நிவாரணமாக இருக்கும். குறிப்பாக, பல ஆண்டுகளாக நில உரிமைக்காக காத்திருந்தவர்களுக்கு சட்டப்பூர்வமான உரிமை கிடைக்கும் என்பதால், இது மிக முக்கியமான வளர்ச்சியாக பார்க்கப்படுகிறது.