சிவகாசியில் உள்ள அச்சகத்தில் 2025-ம் ஆண்டுக்கான காலண்டர் தயாரிப்பு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. சிவகாசி சுற்றுவட்டாரப் பகுதிகளில் பட்டாசுத் தொழிலுக்கு அடுத்தபடியாக அச்சகத் தொழில் முக்கியத் தொழிலாக உள்ளது. சிவகாசி பகுதிகளில் உள்ள 800-க்கும் மேற்பட்ட அச்சகங்களில் நோட்டு புத்தகங்கள், டைரிகள், காலண்டர்கள், பில் புத்தகங்கள், பேக்கிங் கார்டுகள், அழைப்பிதழ்கள், துண்டு பிரசுரங்கள் ஆகியவற்றை பருவகால அடிப்படையில் அச்சடித்து வருகின்றனர்.
இவற்றில், 50-க்கும் மேற்பட்ட அச்சகங்கள் காலண்டர் தயாரிப்பில் பிரத்தியேகமாக ஈடுபட்டுள்ளன. தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் மொத்த காலண்டர்களில் 90 சதவீதம் சிவகாசியில் உள்ள அச்சகங்களில் தயாரிக்கப்படுகிறது. ஆண்டு காலண்டர் வர்த்தகம் ரூ. 350 கோடி. ஒவ்வொரு ஆண்டும் ஆடிப்பெருக்கு அன்று அச்சகங்களில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டு அடுத்த ஆண்டுக்கான காலண்டர் ஆல்பம் வெளியிடப்படும். அதன்படி இந்த ஆண்டும் 2025-ம் ஆண்டுக்கான காலண்டர் ஆல்பம் ஆடிப் பெருக்கு அன்று வெளியிடப்பட்டது.
அதில், தினசரி காலண்டரில் உள்ள கியூஆர் குறியீட்டை ஸ்கேன் செய்தால், 234 சட்டசபை தொகுதிகளின் சிறப்புகளை தெரிந்து கொள்ளலாம். ஒரே காலண்டரில், கடிகாரம், தினசரி, மாத காலண்டர், சிறப்பு வடிவமைப்பு கொண்ட காலண்டர், போட்டோ பிரேம் காலண்டர் என, 300 வகையான காலண்டர்கள், ரூ.20 முதல் ரூ. 2,000 வரை 300 வகைகளில் காலண்டர்கள் தயாராகி வருகின்றன.
கடந்த ஆண்டு லோக்சபா தேர்தலையொட்டி அரசியல் கட்சிகளின் ஆர்டர்கள் அதிகரித்ததால், ஜனவரி இறுதி வரை காலண்டர் தயாரிப்பு மேற்கொள்ளப்பட்டது. இதன் காரணமாக உற்பத்தி 15 சதவீதத்துக்கு மேல் அதிகரித்து, அந்த வகையில் காலண்டர் விற்பனை கடந்த ஆண்டு 400 கோடி. கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டு தேர்தல் நடக்காததால், அரசியல் கட்சிகளின் ஆர்டர்கள் வெகுவாக குறைந்துள்ளன.
இதுகுறித்து, தமிழ்நாடு நாட்காட்டி உற்பத்தியாளர்கள் சங்க செயலாளர் ஜெய்சங்கர் கூறுகையில், ”வழக்கமான காலண்டர் ஆர்டர்களில் பெரிய அளவில் பாதிப்பு இல்லை. தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று, காலண்டர்கள் விற்பனைக்கு அனுப்பப்பட்டு வருகிறது. பல்வேறு காரணங்களால் உற்பத்தி 10 சதவீதம் குறைந்துள்ளது” என்றார்.